பதிவு செய்த நாள்
14
மே
2019
02:05
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரத்திற்கு இணைப்பு படிகள் அமைப் பதில் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.திருத்தணி முருகன் கோவிலில், 2009ம் ஆண்டு, நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது.கோபுரம், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரம் கோபுரம் பணிகள் துவங்கப்பட்டன.கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டு, 2017ம் ஆண்டு, ஏப்ரல்- மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் துவங்கின.
கடந்தாண்டு, டிசம்பர் மாதம் ராஜகோபுரத்தின் ஒன்பது நிலைகள் கட்டுப்பட்டு, சிற்பங்கள் ஏற்படுத்தி வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்தது.கடந்த ஜனவரி மாதத்திற்குள் ராஜ கோபுரத்திற்கு இணைப்பு படிகள் அமைத்து மஹா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுருந்தது. ஆனால், ராஜகோபுரத்திற்கும், மலைக்கோவிலில் உள்ள தேர் வீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணி, நான்கு மாதத்திற்கு மேலமாக நிலுவையில் உள்ளது.இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜகோபுரத்தில் இருந்து, தேர் வீதிக்கு, மொத்தம், 65 படிகள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த படிகளை, கற்களால் செய்யலாம் என, தீர்மானித்து, 96 லட்சம் ரூபாய் செலவாகும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்து, இந்து அறநிலை துறை ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது. டெண்டர் தொகை அதிகம் என்பதால், சிமென்ட்டால் படிகள் அமைத்தால் எவ்வளவு குறையும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்புமாறு ஆணையர் கேட்டுள்ளார். அதற்கான திட்ட மதிப்பீடு, 65 லட்சம் ரூபாய் தயாரித்து அனுப்ப உள்ளோம். ஆணையரின் அனுமதி கிடைத்தால், ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.