பதிவு செய்த நாள்
15
மே
2019
12:05
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் கிராமத்தில், பசுபதீஸ்வரர் கோவிலில், 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் மற்றும் கதிர்பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன், ஆசிரியர் சுகவனமுருகன் ஆகியோரது ஆய்வு அறிக்கை:சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம், சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பாசுபதமானது, குஜராத் மாநிலம் காயாரோஹனம் என்னும் இடத்தில் லகுலீசர் என்பவரால் துவங்கப்பட்டு, அவரின் சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரவியது.தமிழகத்தில் 3 அல்லது 4ம் நுாற்றாண்டில் இந்த மதம் வேரூன்ற துவங்கியது. லகுலீசரின் சமய தத்துவங்கள் பாசுபத சைவம் என்ற பெயர் பெற்றன.கி.பி., 6ம் நூற்றாண்டு துவங்கி 10ம் நுாற்றாண்டு வரை பல்லவர், பாண்டியர் குடவரைகள், முற்கால சோழர்களின் தனிச்சிற்பங்களாக லகுலீசர் சிற்பங்கள் கிடைக்கின்றன.தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட லகுலீசர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தற்போது, விழுப்புரம் மாவட்டம், வரஞ்சரம் என்ற ஊரில் லகுலீசர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றின் தெற்கே வரஞ்சரம் என்ற ஊர் அமைந்துள்ளது. ஆறகழூர் கல்வெட்டுகள் இந்த கோமுகி ஆற்றை ஆழ்வினை ஆறு என குறிப்பிடுகிறது. வரஞ்சரம் என இப்போது அழைக்கப்படும் இந்த ஊர் 11ம் நுாற்றாண்டில் திருவலஞ்சரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள இறைவனை திருவலஞ்சரமுடைய நாயனார் என குறிப்பிடுகிறது. இந்த கோவில் இப்போது பாலாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன் 8ம் நூற்றாண்டில் செங்கல் தளியாக கட்டப்பட்ட இந்த கோவில், 11ம் நுாற்றாண்டில் கற்கோவிலாக மாற்றி கட்டப்பட்டுள்ளது.அப்போது செங்கல்லால் கட்டப்பட்ட கோவிலில் இருந்த லகுலீசர் சிற்பமும், கதிர் விநாயகர் சிற்பமும், தனி மாடத்தில் வைக்கப்பட்டு இன்று வரை வழிபாட்டில் உள்ளன. தனிமாடத்தில் அமர்த்தப்பட்டுள்ள லகுலீசர் 2 அடி உயரமும் முக்கால் அடி அகலமும் உள்ள ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளார்.
இது பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த சிற்பம் ஆகும். தலையில் உள்ள ஜடாபாரமானது நீள் இழையாக இறுதியில் முடிச்சிடப்பட்டு சுருட்டை முடியாக காட்சியளிக்கிறது. காதுகளிலும், கழுத்திலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. தலையானது சற்று வலது பக்கம் சாய்ந்து முகம் புன்னகையுடன் காணப்படுகிறது.அர்த்தலீலாசனத்தில் அமர்ந்து வலது காலை சற்று உயர்த்தி தண்டத்தை வலது காலின் மீது ஊன்றியபடி உள்ளார். இடதுகால் வலதுகால் மடிப்பின் உள் நுழைந்தபடி உள்ளது. வலது கை தண்டத்தை உறுதியாக பற்றியுள்ளது. வலது கரத்தின் அருகே நீண்டு நிற்கும் பாம்பானது காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட லகுலீசர் சிற்பங்களிலேயே மிக அழகிய சிற்பம் இதுவாகும்.லகுலீசர் சிற்பங்கள் கண்டறியப்பட்ட பெரும்பாலான இடங்களில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கையில் நெற்கதிர் வைத்திருக்கும் கதிர் பிள்ளையார் சிற்பம் காணப்படுகிறது. வரஞ்சரத்திலும் தனி மாடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கதிர் பிள்ளையார் காணப்படுகிறார். பிள்ளையார் பெரும்தெய்வமாக உருவாகாத காலகட்டத்தில் வளமையின் சின்னமாக பிள்ளையார் கருதப்பட்டு கையில் நெற்கதிருடன் வழிபாட்டில் இருந்துள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன் வெங்கடேசன்.