பதிவு செய்த நாள்
11
ஜூன்
2019
12:06
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் தெப்பக்குளத்தை பொலிவுபடுத்த வேண்டும் என, பெருமாள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், இக்கோவில் உள்ளது.
ஸ்ரீ ராமானுஜர் வருகை புரிந்த திருத்தலம் என்ற சிறப்பு பெற்ற பாலமலை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி, மார்கழி, சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.பழம் பெருமை மிக்க இக்கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் கிழக்கு பக்கமாக தெப்பக்குளம் உள்ளது. ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி தேர் திருவிழாவின் போதும், தெப்போற்சவம் நடக்கும். அப்போது, அருள்மிகுரங்கநாத பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் தெப்போற்சவம் நடக்கும் போது, மிகப்பெரும் விழாவாக கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், தற்போது தெப்போற்சவம் சிறிய விழாவாக கொண்டாடப்படுகிறது.இது குறித்து, பெருமாள் பக்தர்கள் கூறுகையில்,பழம் பெருமை மிக்க இத்தெப்பக்குளம் போதுமான பராமரிப்பு இன்றி உள்ளது.
பருவமழைக்காலத்தில் பெய்யும் மழை நீர், தெப்பக்குளத்தில் தேங்கும். திருவிழாவின் போது, பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மண்டபத்தில் தங்கி, இளைபாறுவர். ஆனால், தற்போது பராமரிப்பு இல்லாததால், தெப்பக்குளம் பகுதி காதலர்கள் சந்திக்கும் பகுதியாக மாறி விட்டது. தெப்பக்குளத்தை புனரமைத்து, மழைநீர் இதில் சேகரிக்க தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.இப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி விவசாயிகள், தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்தால் நீர் தேங்கும். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயமும் செழிக்கும் என்றனர்.