ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பகுதியில் இரண்டு நாட்களாக கடல் உள்வாங்கியதால், நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்தனர்.
தேவிபட்டினம் கடல் பகுதியில் நவபாஷாண கோயில் உள்ளது. இங்கு தோஷ பரிகாரம், தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் கடலில் புனித நீராடி, கடல் பகுதியில் அமைந்துள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து பரிகார பூஜைகள் செய்வார்கள். இரண்டு நாட்களாக கடல் உள்வாங்கியதால் நவக்கிரகங்களின் சிலைகள் அனைத்தும் வெளியில் தெரிகின்றன. கடல் உள்வாங்கியதால், சிலைகள் உள்ளபகுதியில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்யவே பக்தர்கள் அச்சப்படுகின்றனர். கடலில் 100 மீ., தரை வெளியே தெரிவதால் புனித நீராட முடியமால் தவிக்கின்றனர். தற்போதைய தென் மேற்கு பருவக்காற்றால் கடல் உள்வாங்கியதாகவும், இது போன்று இரு நாட்களாக தொடர்ந்து உள்வாங்கிய நிலை அதிசயமாகவும் உள்ளது, என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.