சின்னமனூர்: குச்சனூர் சுரபி நதி மாசடைந்துள்ளதால் ஏற்படும் துர்நாற்றத்தில் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆடி சனிவார பெருந்திருவிழா துவங்கும் முன் தூய்மைப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரசித்தி பெற்ற பரிகார தலமான குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலுக்கு வாரத்தின் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
கோயிலின் எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி, கொடிமரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால், தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். கோயில் வளாகம் தூய்மையின்றி இருப்பதால் வெளியூர் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பெரியாறு அணையில் நீர்மட்டம் சரிந்ததால், குச்சனூர் ராஜ வாய்க்காலில் நீர் திறக்கப்படவில்லை. இதனால் சுரபி நதி நீரின்றி வறண்டுள்ளது. இதில் பேரூராட்சி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில் "2 ஆண்டுகளுக்கு முன் கோயில் எதிரே ராஜ வாய்க்கால் கரையில் படித்துறை அமைத்து, காண் கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் கீழ் பகுதி வாய்கால் தூர்வாராததால், கோயிலருகே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பேரூராட்சி கழிவுநீருடன் பக்தர்கள் விட்ட ஆடைகளும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆடி சனிவார பெருந்திருவிழா துவங்கவுள்ளது. அதற்குள் கால்வாயை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.