பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
12:07
தஞ்சாவூர்: பல நுாற்றாண்டுகளுக்கு முன்பாகவே, சோழ மன்னர்கள் காலத்தில், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மழை நீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். தஞ்சையை தலைநகராக வைத்து, ஆட்சி செய்த ராஜராஜ சோழன், மழை நீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக, பெரிய கோவில் அருகே, சிவகங்கை என்ற குளத்தை அமைத்து, கோவிலில் விழும் மழை நீரை சேமித்துள்ளார்.சோழர்களுக்கு பின், ஆட்சிக்கு வந்த சரபோஜி மன்னரும், இதே தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளார் என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர், மணிமாறன் கூறியதாவது:ராஜராஜ சோழன், தன் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை வளப்படுத்த, குளம், ஏரிகளை அமைத்தார். குடிநீர் தேவைக்காக, பெரியகோவில் அருகே, சிவகங்கை குளத்தை வெட்டி, மழை காலங்களில், குளத்திற்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்துள்ளார். பெரிய கோவிலின் வடக்கு புறத்தில், மழை நீர் செல்லும் வகையில், சாளரம் என்ற இரண்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தி, இரண்டிலும் தண்ணீரை தடுத்து, குளத்துக்கு அனுப்பும் முறையையும் செய்துள்ளார். சிவகங்கை குளம் நிரம்பிய பின், அய்யன்குளம், சாமந்தான் குளங்களும் தண்ணீர் செல்லும் படி வாய்கால்கள் அமைக்கப்பட்டு, மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் கட்டிய அனைத்து கோவில்களிலும், மழைநீர் சேகரிக்கும் சாளரம் இருந்துள்ளது. தொடர்ந்து, தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், ஜல சூத்திரம் என்ற அமைப்பை உருவாக்கி, கோட்டையில் உள்ள கிணறுகள், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் செல்லும் கட்டமைப்பை வடிவமைத்தார். ஆங்கிலேயர் காலத்தில் கூட, இவை பாரமரிக்கப்பட்டு வந்துள்ளன. கடந்த, 50 ஆண்டுகளில் தான், அவை வீணாகி விட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.