பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
12:07
ராமேஸ்வரம்: குண்டும், குழியுமாக உள்ள ராமேஸ்வரம் கோயில் ரதவீதி சாலையில் ஆக., 2 ல் ஆடித்தேர் உலா வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதி, சன்னதி தெரு உள்ளிட்ட சில தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரதவீதி சாலை நடுவில் குழி தோண்டி குழாய் பதித்தும், கோயிலுக்குள் தேங்கும் மழைநீரை வெளியேற்ற ரதவீதியில் வாறுகால் அமைக்கும் பணியில் மாநில நெடுஞ்சாலைதுறை, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 25 ல் ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருக்கல்யாண விழா கொடி ஏற்றம் நடக்கிறது. ஆக.,2 ல் ஆடித்தேரோட்டம் நடைபெறும். இதற்கு இன்னும் 28 நாட்கள் உள்ள நிலையில் ரதவீதியில் பாதாள சாக்கடை, மழைநீர் வாறுகால் பணி முழுமை பெறாமல் மந்தமாக நடக்கிறது. இதனால் ரதவீதி சாலை கான்கிரீட் கம்பிகள், குழாய்கள், பள்ளம் நிறைந்து கரடு முரடாக உள்ளதால், 28 நாட்களுக்குள் சாலையை புதுப்பித்து ஆடித்தேர் உலா வருமா என பக்தர்களிடம் ஐயம் எழுந்துள்ளது. இருப்பினும் ரதவீதி சாலையை புதுப்பித்து ஆடித்தேரோட்டம் நடக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலர் ராமமூர்த்தி கூறுகையில், பல நுாறு ஆண்டுகளாக ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் ஆடித்தேரோட்டம் நடந்து வரும் நிலையில், தற்போது இரு திட்ட பணியால் சாலை மோசமாக உள்ளது. இதில் 20 டன் எடையுள்ள ஆடித்தேர் சிக்கினால் தேரோட்டத்திற்கு சிக்கல் ஏற்படும். எனவே ஆன்மிக மரபு தடையின்றி நடக்க ரதவீதி சாலையை புதுப்பிக்க மாநில அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும், என்றார்.