திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5ம் கட்டஅகழாய்வு பணி விறுவிறுப்படைந்துள்ளது.
திருப்புவனம் அருகே கீழடியில் கருப்பையா, முருகேசன் ஆகியோரது நிலத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 47 லட்ச ரூபாய் செலவில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஏழு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் வட்டப்பானை, பானை ஓடுகள் மட்டும் கிடைத்தன.
முருகேசன் என்பவரது நிலத்தில் இரட்டைச்சுவர் கண்டறிந்த பின் அகழாய்வு பணி தீவிர மடைந்துள்ளன. இரட்டைச்சுவரின் தொடர்ச்சியை கண்டறிய ஜி.பி.ஆர்., கருவி மூலம் ஆய்வு நடத்திய பின் கூடுதலாக ஏழு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதுவரை 14 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் நேரடியாக களப்பணியில் ஈடு பட்டு வருகிறார். தொல்லியல் துறையின் இந்த தீவிர அகழாய்வு பணிகள் மக்களை மகிழ்ச் சியில் ஆழ்த்தியுள்ளனர். தர்மபுரி, சேலம், விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஏராளமான பார்வையாளர்கள் கீழடியில் அகழாய்வு நடைபெறும் இடத்தை வந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.