பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
தமிழகத்தில் தற்போது, ஆன்மிக விஜயம் மேற்கொண்டிருக்கிறார், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீபாரதி தீர்த்த மகா சுவாமிகள். கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் விஜயத்தை முடித்து, கோவையில் தற்போது அவர் தங்கி பக்தர்களுக்கு தர்ம நெறியை வலியுறுத்தியும், உலக மக்கள் நலனுக்காக சாரதா அன்னைக்கு விசேஷ பூஜைகளும், பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வருகிறார். ஆதிசங்கரர் தொடங்கி, 36வது பீடாதிபதியாக சிருங்கேரியைத் தலைமையிடமாகக் கொண்டு அருளாட்சி செய்து வரும், ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளின் 62வது பிறந்த நாள் விழா, இன்று கோவையில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை, வர்தந்தி விழா என்று அழைப்பர். அவரது தர்ம பிரசாரப் பயணத்தை, விஜய யாத்திரை என்றழைப்பர். கோவையில் உள்ள சாரதாலயத்தில் ஜகத்குரு ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் 62வது பிறந்த நாளை ஒட்டி, ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் விசேஷ பூஜை மற்றும் தர்ம நெறிகளை வலியுறுத்தும் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மாலையில், நாடு முழுவதில் இருந்து வரும் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடும் நடக்கிறது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் தலையாய மடம்சிருங்கேரி. ஜகத்குரு ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகள் அப்பரம்பரை வழியில், தொடர்ந்து அனைத்து சமுதாய மேம்பாட்டிற்கு, தர்ம நெறிகளை வலியுறுத்தி வருகிறார். அவரது சிறப்புரைகள் தமிழில் அமைந்துள்ளன. கடந்த 20ம் தேதி முதல் கோவையில் முகாமிட்டு, பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கி வருகிறார். வரும் ஏப்ரல் முதல் தேதி, கோவையில் ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். அதன் பின், ஏப்., 4ம் தேதி பாலக்காடு பயணம் மேற்கொள்கிறார் என்று, சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கௌரிசங்கர் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.