மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
பதிவு செய்த நாள்
10
ஆக 2019 11:08
பல்லடம்: பல்லடம் அருகே, ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள், பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன் காரணமாக, சாதாரண நாட்களை காட்டிலும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று முன்தினம், ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் மாகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, சுமங்கலி பூஜையுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புடவை, பழம், பூ, வளையல், இனிப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்துக்கு சீர்வரிசையாக வழங்கினர். மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மாலை மாற்றுதல், மாங்கல்யம் அணிவித்தல் உள்ளிட்ட வைபவங்களுடன் திருக்கல்யாண உற்சவம் நிறைவு பெற்றது. தொடர்ந்து, மீனாட்சி அம்மனுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு, குழந்தைப்பேறு கிடைக்க வேண்டி வழிபாடு நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவரும், திருக்கல்யாணத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். சிறப்பு அலங்காரத்தில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாகாளியம்மன், மற்றும் மாரியம்மன் அருள்பாலித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
|