பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
சிவபெருமானின் ஏழுவிதமான திருக்கோலங்களை "சர்வேஸ்வர தரிசனம் என்பார்கள். சிரசில் கங்கை, சந்திரமவுலி, நெற்றிக்கண், கழுத்தில் நாகாபரணம், உடுக்கை ஏந்திய கோலம், திரிசூலம் தரித்தது, சிவபாத தரிசனம் ஆகிய ஏழும் ஒருங்கே கூடியதே "சர்வேஸ்வர தரிசனம் ஆகும். சிவபெருமானின் இந்த அற்புத தரிசனத்தைக் காண விரும்பினாள், அன்னை அகிலாண்டேஸ்வரி, இதை அறிந்த சப்தகன்னியர், தாங்கள் வழிபடும் சிவனின் சுயம்புத் தலங்கள் அத்தகைய தரிசனங்களை அளிப்பதே என்று கூறி, அன்னையை அழைத்துச் சென்று அந்த ஏழு தலங்களிலும் வழிபடச் செய்தனராம்.
அவை ஹரிமங்கை, சக்கரமங்கை, நந்தி மங்கை, சூலமங்கை, தாழமங்கை, பசுமங்கை, புள்ளமங்கை ஆகிய திருத்தலங்களாகும். இங்கு உறையும் இறைவன் முறையே ஹரிமுக்தீஸ்வரர், சக்கரவாகேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், கிருத்திவாகேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், பசுபதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் ஆவர். இந்த ஏழு திருத்தலங்களும் "மங்கை என்ற பெயருடன் முடிவதால் இவை சப்தமங்கையர் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தலங்கள் ஏழும் கும்பகோணம் - தஞ்சை பாதையில் அமைந்துள்ளன.