பதிவு செய்த நாள்
30
ஆக
2019
12:08
போத்தனுார்:விநாயகர் சிலை கரைக்கும் வசதிக்காக, குறிச்சி குளத்தில் தடுப்பு அமைக்கப் பட்டுள்ளது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ல் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, இந்து அமைப்பினரும், பக்தர்களும், ஆங்காங்கே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவர். 3 முதல், 5 நாள் வரை வழிபாடு நடத்தியதும், சிலைகளை ஊர்வல மாக கொண்டு சென்று, நீர் நிலைகளில் கரைப்பர்.குறிச்சி, சுந்தராபுரம், போத்தனுார், மதுக்கரை சுற்றுவட்டாரத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், குறிச்சி குளத்தில் கரைக்கப்படும். சிலை கரைப்பு நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். பக்தர்கள் வசதிக்காக, குறிச்சி குளக்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்காளியம்மன் கோவிலில் இருந்து, 200 மீட்டர் நீளத்துக்கு வடக்கு நோக்கி, சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இடையே, 50 அடிக்கு இடைவெளி விடப்பட்டு, சிலைகளை குளத்துக்குள் எடுத்துச் செல்வதற்கான மண் தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக, மண் கொட்டப்பட்டுள்ளது. போத்தனுார் போலீசார், இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.