பதிவு செய்த நாள்
07
செப்
2019
11:09
தஞ்சாவூர் : சந்திரயான் - 2 வெற்றிகரமாக நிலவில் இறங்கி செயல்பட வேண்டி, திங்களூர் சந்திரன் கோவிலில், நேற்று மாலை சிறப்பு யாகம் நடந்தது.
தஞ்சாவூர், திங்களூரில் அமைந்துள்ளது, கைலாசநாதர் கோவில். நவக்கிரக தலங்களில், சந்திரனுக்கு உரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில், தனி சன்னதியில், சந்திர பகவான் அருள்பாலித்து வருகிறார்.இங்கு, திங்கள் கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 2008ல், சந்திரயான் - 1 விண்வெளியில் ஏவப்பட்டபோது, அதன் பயணம் வெற்றிகரமாக அமைய, இக்கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்பட்டன.
நடப்பாண்டு, ஜூலை, 22ல், சந்திரயான் - 2 விண்கலம், விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான் - 2, இன்று அதிகாலை வெற்றிகரமாக நிலவில் இறங்கும் என, அறிவிக்கப்பட்டது. சந்திரயான் - 2, திட்டமிட்டபடி நிலவில் இறங்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும், தடைகள் எதுவும் ஏற்பாடமல் இருக்கவும் வேண்டி, நேற்று மாலை, திங்களூர் சந்திரன் கோவிலில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சந்திரனுக்கு மஞ்சள், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பொதுமக்கள், பக்தர்கள், திரளாக தரிசனம் செய்தனர்.