பதிவு செய்த நாள்
10
செப்
2019
11:09
சிட்னி:ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை, விரைவில், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக கோவில்களில் இருந்து, பாரம்பரியமிக்க பல்வேறு பழங்கால சிலைகள், காணாமல் போயின. இவற்றை மீட்க, சிறப்பு அதிகாரியாக, பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இவர் நடத்திய விசாரணையில், ஆஸ்திரேலியாவில், 16ம் நுாற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை இருப்பது தெரிய வந்தது. தெற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியகம், 75.7 செ.மீ., உயரமுள்ள, இந்த நடராஜர் சிலையை, 2001ம் ஆண்டு, அமெரிக்காவின், ஓலிவர் போர்ஜ் அண்டு பெரன்டன் லிங்க் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருந்தது.இந்த சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என்று, இது குறித்த உரிய ஆவணங்களை, தமிழக காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதை மீட்கும் முயற்சியாக, ஆஸ்திரேலியாவுக்கான, இந்திய துணை கமிஷனர், கார்த்திகேயன் மூலம், ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனத்திடம் பேச்சு நடத்தப்பட்டது.இதையடுத்து, இந்த நடராஜர் சிலையை, தமிழக அரசிடம் ஒப்படைக்க, ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் முடிவு செய்தது. சிலை விரைவில், தமிழகம் வந்து சேரும் என தெரிகிறது.