பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
ஓசூர்: ஓசூரில், ஐயப்ப ரத யாத்திரை நேற்று 11ம் தேதி துவங்கியது. பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். தமிழ்நாடு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப தர்மத்தை கிராமம் தோறும் பிரசாரம் செய்யவும், சபரிமலை செல்ல முடியாதவர்கள் ஐயப்பனை வணங்கும் வகையிலும், சென்னை, ஓசூர், புதுச்சேரி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ஏழு இடங்களில், ஐயப்ப தர்ம பிரசார வாகன ரத யாத்திரை நேற்று 11ம் தேதி துவங்கப் பட்டது.
ஓசூர், தேர்ப்பேட்டை நில மாரியம்மன் கோவிலில் இருந்து, ரத யாத்திரை பொறுப்பாளர் ராஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் ஆகியோர் தலைமையில், ஐயப்ப பிரசார யாத்திரை நேற்றிரவு 11ம் தேதி புறப்பட்டது.
முன்னதாக, கோ பூஜை செய்யப்பட்டு, ஐயப்பன் மற்றும் நில மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கிராமங்கள் தோறும், ஒரு மாதம் இந்த ரத யாத்திரை மூலம், ஐயப்பனின் தர்மத்தை பிரசாரம் செய்ய உள்ளனர்.
அதுமட்டுமின்றி, சபரிமலை ஐயப்பன் கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்ட அணையா விளக் கை மக்கள் வீடுகளுக்கு எடுத்து செல்லவும், ரத யாத்திரையில் வரும் ஐயப்பனை பெண்கள் தொட்டு பூஜை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐயப்பன் எல்லாருக்கும் பொதுவானவர். அவர் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லை, ஜாதி, மத பேதமில்லை. தீண்டாமை இல்லை, உயர்வு, தாழ்வு இல்லை என்பதை விளக்கும் வகையில் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பா.ஜ., மாவட்ட தலைவர் முனிராஜ், நிர்வாகி சீனிவாசன் மற்றும் பெண்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.