பதிவு செய்த நாள்
13
செப்
2019
04:09
மகாவிஷ்ணுவிற்கு உகந்த மாதமான புரட்டாசி அமாவாசை மகாளய பட்ச அமாவாசை என்று போற்றப்படுகிறது. மகாளய பட்ச அமாவாசைக்கு முந்தைய பதினைந்து திதிகளுமே தினசரி தர்ப்பணத்திற்கு உரிய முக்கியமான மாளயபட்சத் தர்ப்பணத் திதிகளாகும். அறிவியல் ரீதியாக பூமி மற்றும் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
பூமி, சூரியனின் வட கிழக்கில் பங்குனி மாதமும், தென்மேற்கில் புரட்டாசி மாதமும் வருகிறது. இந்த வேளையில் இறைவழிபாடுகள் போற்றப்படுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று காலமான மூதாதையர்களுக்குத் திதி கொடுத்தால் யாரை நினைத்துத் திதி கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும் வந்து திதியை பெற்றுக் கொள்வர். ஆனால், மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் பித்ருக்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகப் போற்றப்படுகிறது. பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம். அன்று ஒரு வேளை உணவு உண்டு விரதம் கடைபிடிப்பது சிறப்பாகும்.
பித்ரு பட்சம் - பித்ரு என்றால் முன்னோர், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். எனவே பித்ருக்களுக்கு மட்டுமே உரிய நாட்கள் மாளயபட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாளயபட்ச நாட்களில் எமதர்மன், பிதுர் லோகத்தில் இருக்கும் நம் மூதாதையர்களை பூலோகத்திற்குச் சென்று அவரவர்களின் வாரிசுகளை சந்திக்கும்படி அனுப்பி வைப்பது வழக்கம். பூலோகத்திற்கு வரும் பித்ருக்கள், தங்கள் வாரிசுகள் தங்களுக்குப் பூஜை செய்ய மாட்டார்களா? எள்ளும், தண்ணீரும் அளிக்க மாட்டார்களா? என்று ஏங்குவார்கள். எள்ளும், தண்ணீருமே பித்ருக்களுக்கு ஆகாரமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் முன்னோர்களுக்கான பித்ரு பூஜையை வேத விற்பன்னர்களின் உதவியுடன், சாஸ்திர சம்பிரதாயப்படி செய்து பிண்டம் வைத்து எள்ளும், நீரும் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் அரச மரத்தடியில் அமர்ந்து பிதுர் பூஜை செய்தால் அந்தப் பூஜையில் அளிக்கப்பட்ட பொருட்கள் உடனே பித்ருக்களை அடைவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மகாளயபட்ச நாட்களில் காலம் சென்ற நம் முன்னோர்கள் மட்டுமல்லாது, காலம்சென்ற உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களுக்கும் பிதுர்பூஜை செய்யலாம். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மாளய அமாவாசை ஆகியவை விசேஷமாக போற்றப்படுகின்றன. எந்த மாதத்திற்கும் இல்லாத பெருமை மாளய பட்ச நாட்கள் என்றே குறிப்பிடப்படும் புரட்டாசி மாதம் என்பதால் புரட்டாசி அமாவாசையும் அதற்கு முந்தைய நாட்களும் போற்றப்படுகின்றன.