ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடற்கரையில் சுகாதாரம் கேள்விக்குறியானதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் அவல நிலை உள்ளது.
சேதுக்கரையில் சேது பந்தன ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு இருந்துதான்அனுமன் இலங்கைக்கு பாலம் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் தற்போது கடலுக்குள் மூழ்கியுள்ளது. கடல் உள்வாங்கும் போது இந்த பாலத்தைகாண முடியும். இங்கு அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய திதி, தர்பணம் உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். சேது கடற்கரைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மகாளயஅமாவாசை, ஆடி அமாவாசை போன்ற முக்கியநாட்களில் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். முன்னோருக்கு தர்பணம் கொடுக்கும் பக்தர்கள் உடுத்தியிருக்கும் பழைய ஆடைகளை கடலில் விடுகின்றனர். இவை உடனுக்குடன் அகற்றப்படாமல் கடற்கரை முழுவதும் பழைய ஆடைகள் அலங்கோலமாக சிதறிக்கிடக்கின்றன. அவற்றில் மிதிக்கும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இதே போல் சேதமடைந்த சுவாமி சிலைகளும் இங்கு கடலில் போடப்படுகிறது.
இதில் பாசி படர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பக்தர்கள் குப்பையை கடலில் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கடல் நீர் அசுத்தமாக உள்ளது. ஆடுகளால் தொல்லை: இப்பகுதி மக்களால் வளர்க்கப்படும் ஆடுகள், தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களை பாடாய் படுத்துகின்றன. தர்பணம் முடிந்த பின் கடலில்கரைக்கப்படும் அரிசி, நவதானியங்களை உண்பதற்காக ஆடுகள் போட்டியிடுகின்றன. பக்தர்கள் எந்த பொருட்களையும் கரையில் வைக்க முடிவதில்லை.எனவே, பழைய துணிகள் உள்ளிட்ட கழிவுகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரம் பேணவும், ஆடுகளை கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.