பதிவு செய்த நாள்
02
அக்
2019
02:10
ஸ்ரீவில்லிபுத்துார் : திடீர் மழையால், சதுரகிரி கோவிலுக்கு சென்று, திரும்ப முடியாமல் தவித்த பக்தர்களை, வனத்துறையினர் மீட்டனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, செப்., 26ம் தேதி முதல், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.செப்., 29 இரவு பெய்த மழையால், மலை ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவிலில் இருந்து இறங்கிய பக்தர்கள், சங்கிலிப்பாறை மற்றும் மாங்கனி ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த, ஸ்ரீவில்லிபுத்துார் வன சரகர் வேல்சாமி தலைமையிலான, மீட்புக் குழுவினர், அவர்களை மீட்டு, தாணிப்பாறைக்கு, நேற்று அழைத்து வந்தனர்.நவராத்திரிக்காக, கோவிலில் தங்கியிருக்கும், 45 பக்தர்கள், மழையின் தன்மையை பொருத்து, கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவிலும் மழை பெய்ததால், நேற்றும், மலைக்கு செல்ல, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நவராத்திரி பூஜையை முன்னிட்டு, 6, 7, 8 தேதிகளில், சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மழையின் தன்மையை பொருத்தே அனுமதிக்கப்படுவர் என, வனத்துறை அறிவித்து உள்ளது.