பதிவு செய்த நாள்
02
அக்
2019
03:10
திருப்பதி : செவ்வாய் கிரகத்துக்கு செல்லும், நாசா வின் விண்கலத்தில் பொறிக்க, திருப்பதி ஏழுமலையான பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசா, செவ்வாய் கிரகத்துக்கு, மார்ஸ் 2020 ரோவர் விண்கலத்தை, அடுத்த ஆண்டு, ஜூலையில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இது, 2021 பிப்ரவரியில், செவ்வாயில் தரையிறங்கும். 1,000 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான தடயங்கள், தட்பவெப்பம் உள்ளிட்ட மாதிரிகளைச் சேகரிக்கும்.இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, நாசா வழங்கியது.
கடந்த, 30ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உலகம் முழுவதும் பல லட்சம் பேர், இந்த விண்கலத்தில்பொறிக்க, தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விண்கலத்தில், திருப்பதி ஏழுமலையான் பெயரும் பொறிக்கப்பட உள்ளதாக, தேசிய சுவடிகள் இயக்கத்தின் முன்னாள் இயக்குனர், வெங்கட ரமண ரெட்டி தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், திருப்பதியில் அவர் கூறியதாவது:திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளின் பரம பக்தன் நான். நாசாவின், மார்ஸ் 2010 ரோவர் விண்கலத்தில், வெங்கடாஜலபதியின் பெயரை பொறிக்க பதிவு செய்தேன். அதற்கான அனுமதியும் பெற்று விட்டேன். இதனால், செவ்வாய் செல்லும் நாசாவின் விண்கலத்தில், ஒரு கோடிக்கும் அதிகமான பெயர்களில் திருப்பதி ஏழுமலையான் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.