மருதமலையில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷத்தில் பக்தர்கள்
பதிவு செய்த நாள்
03
நவ 2019 01:11
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த அக்., 28ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.
விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 16 வகையான திரவங்கள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி தங்க கவசத்துடன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று பகல், தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில், வீரபாகு குதிரை வாகனத்தில் வந்து தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் துாது சென்றார். அதன்பின், பகல், 3.15 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரத்திற்காக, அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது, சூரபத்மன், மா மரமாக உருமாறி நின்றார். சுப்பிரமணியசுவாமி, தானே நேரில் வந்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து பானுகோபன், சிங்கமுகாசுரன் வதம், கஜமுகாசுரன் வதங்கள் நடந்தன. பின், சுப்பிரமணிய சுவாமிக்கு, வெற்றி வாகை மாலை சூடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம், பூஜை தீபாராதனை நடந்தது. மருதமலையில்சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அரோகரா கோஷங்களை எழுப்பினர்.கந்தசஷ்டி விழாவின் இறுதிநாளான இன்று காலை, 9:00 முதல் 10:30 மணிக்குள், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையை திருமணம் செய்யும் நிகழ்ச்சியான, திருக்கல்யான உற்சவம் நடக்கிறது.
|