திருவனந்தபுரம்: தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள சிவ பார்வதி கோவிலில் உலகின் உயரமான சிவலிங்கம் பொது மக்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கேரளாவின் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் மகேஸ்வரம் சிவ பார்வதி கோவில் அமைந்துள்ளது.
இக்கோயில் நிர்வாகம் கடந்த 2012ல் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்க முடிவு செய்தது. அதன்படி தற்போது ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சிவலிங்கம் கட்டப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் மொத்த உயரம் 111.2 அடி. இந்த சிவலிங்கம் எட்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் தியான மண்டபங்களும் சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் கடவுள் சிலைகளும் அகத்தியர் பரசுராமர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் பக்தர்கள் வழிபட சிவலிங்க சிலையும். எட்டாவது அடுக்கில் கைலாய மலையில் சிவன் பார்வதி தியானம் செய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா புக் ஆப் ரிக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்துள்ளது.