பதிவு செய்த நாள்
11
நவ
2019
12:11
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி மலையில் பெய்த கனமழையால் நீர்வரத்து ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டு, சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்று, திரும்ப முடியால் மலையில் தவித்த பக்தர்களை வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் நள்ளிரவில் மீட்டனர். ஐப்பசி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நவ.9ம் தேதி சென்ற பக்தர்களில் 250 க்கும் மேற்பட்டோர் கோயிலில் தங்கி இருந்தனர்.
இதில் சென்னை, ஆரணி, ஸ்ரீபெரும்புதுார் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 38 பக்தர்கள், அன்று பகல் 3:00 மணிக்கு மலையிலிருந்து இறங்கத் துவங்கினர். அப்போது மழை பெய்ததால் மாங்கனி ஓடை மற்றும் சங்கிலிப்பாறை ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பக்தர்கள் இறங்க முடியாமல் பரிதவித்தனர். இதுகுறித்து தகவல் தெரிந்த அறநிலையத்துறை, வனத்துறை,ஸ்ரீவி., மற்றும் வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார், ஸ்ரீவி., டி.எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று, கயிறு கட்டி, பக்தர்களை மீட்டு, நள்ளிரவு 12:50 மணியளவில் தாணிப்பாறைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் நேற்று காலையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மலையில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்களை, நேற்று காலை 6:00 மணி முதல், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைமீட்பு குழுவினர் பத்திரமாக அழைத்து வந்தனர். பேரையூர் டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில், நீர்வரத்து ஓடைகளை போலீசார் கண்காணித்தனர்.
அனுமதி மறுப்பு: இந்நிலையில் நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்களை, வனத்துறையினர் அனுமதிக்காததால், ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பினர். வனப்பகுதியில் கனமழை பெய்யும் என்பதால், இன்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார், வனத்துறை, அறநிலையத்துறை, தீயணைப்புத் துறையினர் தாணிப்பாறை மற்றும் கோயில் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.