சிறுவனாக இருந்தபோது, காந்திஜி பயந்த சுபாவம் கொண்டிருந்தார். இரவில் திருடர் வந்துவிடுவானோ, பாம்பு வந்துவிடுமோ என பயப்படுவார். ஒருநாள் இரவு, இருட்டு அறை ஒன்றுக்குள் செல்ல பயந்து கொண்டு இருந்தார். பயப்படாமல் போ என்று மற்றவர்கள் சொல்லியும் தைரியம் வரவில்லை. அவர்கள் வீட்டில் ரம்பா என்ற வேலைக்காரப்பெண் இருந்தார். அவர் காந்திஜியின் வளர்ப்புத்தாயும் கூட! அவர், மோகன்தாஸ்! உனக்கு பயம் தோன்றும் போதெல்லாம் ராம் என்ற மந்திரத்தைச் சொல். பயம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடும், என்றார். பிஞ்சுமனத்தில் இந்த மந்திரம் ஆழப் பதிந்தது. நம்பிக்கையுடன் ராம் ராம் என்று சொன்னபடியே அறைக்குள் சென்று திரும்பினார். எப்போதும் ராமநாமத்தை ஜெபிக்கத் தொடங்கினார். பயம் அறவே நீங்கியதை உணர்ந்தார். கோட்சே துப்பாக்கியால் சுட்டபோதும் கூட அவர் ஹே! ராம்! என்று சொல்லி உயிர் நீத்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி, ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலைப் பாடத் தவறியதில்லை.