சபரிமலை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் போலீசார் திணறுகின்றனர். பம்பை, நிலக்கல், எருமேலி என அனைத்து இடங்களிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருக்கின்றனர். மண்டல பூஜை வரும் நிலையில் சபரிமலையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டரை லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். தரிசனத்திற்கு 10 மணி நேரம் ஆகிறது.
மதியத்துக்கு பின்னர் கூட்டம் மேலும் அதிகமானதால் 18-ம் படியேறுவற்கான வரிசை சபரிபீடம் வரை நீண்டது. இதனால் பக்தர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கும் கூட்டம் அதிகரிக்கவே நிலக்கல்லில் பக்தர்கள் தடுக்கப்பட்டனர். நிலக்கல் பார்க்கிங் நிரம்பியதால் இலவங்கல், துலாப்பள்ளி, ளாகா, வடசேரிக்கரை, பத்தணந்திட்டை, எருமேலி பகுதிகளிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. சன்னிதானத்தில் இருக்கும் பக்தர்கள் விரைவாக பம்பை திரும்பும் படி ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
நடை அடைப்பு: இதற்கிடையில் சூரிய கிரகணம் காரணமாக 26-ம் தேதி காலை 7:30 முதல் 11:30 வரை நடை அடைக்கப்படுகிறது. எனவே காலை 5:30 முதல் மாலை 5:30 வரை நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் பம்பை செல்ல அனுமதிக்கப்படாது. அன்று மாலை தங்க அங்கி சன்னிதானம் சென்றபின் பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற னுமதிக்கப்படுவார்கள்.