சபரிமலை : சபரிமலையில் நாளையும், நாளை மறுநாளும் நெய்யபிஷேக நேரம் குறைகிறது.சபரிமலையில் நாளை மறுநாள் மண்டலபூஜை நடைபெறுகிறது. நாளை சூரிய கிரகணம் வருவதால் நாளையும், நாளை மறுநாளும் தரிசன நேரம் மற்றும் நெய்யபிஷேக நேரம் குறைகிறது.
நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து 3:15 மணிக்கு துவங்கும் நெய்யபிஷேகம், காலை 6:45 மணியுடன் நிறைவு பெறும்.அதன் பின்னர் கோயில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்பட்டு உஷபூஜை நடைபெறும். தொடர்ந்து 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்து 11:30 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு புண்ணியாகம் நடத்துவார். தொடர்ந்து உச்ச பூஜை முடிந்து 1:45 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாலை 5:00 மணிக்கு நடை திறந்து, தங்க அங்கி வந்து மாலை 6:30 மணிக்கு தீபாராதனை முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வழக்கமாக 17 மணி நேரம் தரிசனம் நடைபெறும்.நாளை 12 மணி நேரம் மட்டுமே தரிசனம் நடைபெறும். நெய்யபிஷேக நேரம் ஐந்து மணி நேரமாக குறையும்.டிச. 27ல் மண்டலபூஜை நாளில் அதிகாலை 3:15 மணிக்கு துவங்கும் நெய்யபிஷேகம், 9:30 மணிக்கு நிறைவு பெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு சீசனுக்காக டிச.30ல் நடை திறந்து டிச.31ல் அதிகாலையில் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும்.நவ., 16ல் தொடங்கிய மண்டலகாலத்தில் நேற்று வரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வருமானம் 200 கோடியை நெருங்கியுள்ளது.