எழுத்தாளர்கள் எழுத்து துறையில் சாதிக்கவும், புகழ் பெறவும் சோமாஸ்கந்தரை வழிபட வேண்டும். சோமன் என்றால் சந்திரன். சந்திரனைத் தலையில் சூடியவர் சிவன். அவரும், பார்வதியும் நந்தியின் மீது இருந்த போது, இளைய மகன் கந்தன் நடுவில் வந்து அமர்ந்தான். சோமனையும், கந்தனையும் இணைத்து சோமாஸ்கந்த வடிவம் உருவானது. சிவன் கோயில் பிரகாரத்தில் சோமாஸ்கந்தருக்கு சன்னதி இருக்கும். இவருக்கு கும்ப நீரால் அபிஷேகம் செய்ய நல்ல புத்தி, உடல் வலிமை கிடைக்கும். வில்வத்தால் அர்ச்சனை செய்தால் படிப்பு, எழுத்து நன்றாக வரும். எழுத்து துறைக்கு வர விரும்புவோர் வில்வார்ச்சனை செய்வது நல்லது. அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலம் தக்கோலநாதர் கோயிலில், சிவன் சன்னதிக்கு முன்பாக சோமாஸ்கந்தர் சிற்பம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மிக சக்தி வாய்ந்தவராக இவர் போற்றப்படுகிறார்.