திருவாரூர் அருகே, திருப்பள்ளி முக்கூடல் அடுத்த, குருவி ராமேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ளது அஞ்சணாட்சி அம்மன் உடனுறை திருநேத்திரநாதர் கோவில்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் அர்ச்கராக இருந்தவர் சங்கர குருக்கள். தற்போது 94 வயதாகும் இவரது தாத்தா,அப்பா எல்லோரும் இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்கள்தான். இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில் தாத்தா அப்பாவுடன் சிறு வயது முதலே இந்த கோயிலுக்கு வந்து போவார் அவர்களுக்கு பின் இவர் பொறுப்புக்கு வந்தார் இவருக்கு கோவில்தான் எல்லாமே. அறநிலையத்துறை சம்பளம் மூவாயிரம் ரூபாய் வரும் இது போக தட்டில் விழும் வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்திவந்தார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை அருளும் இந்த கோயிலின் தெய்வத்தை பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தேடி வந்து தரிசித்து செல்வர்.மேலும் மூலவரை வழிபட வந்த மகிரிஷிக்கு தன் தலையை சாய்த்து வழிவிட்ட நிலையில் இருக்கும் நந்தியை தரிசிக்கவும் பலர் வருவர். அப்படி வருபவர்களை எல்லாம் நன்றாக கவனித்து அவர்கள் மனம் சந்தோஷப்படும்படி பூஜைகள் செய்து அனுப்புவார் சங்கரகுருக்கள்.
தனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியும் ஊர் பெரியவர்களிடம் நன்கொடை பெற்றும் கோவிலின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்துள்ளார் காரணம் இவருக்கு கோவிலும் இங்கு குடியிருக்கும் சாமியும்தான் முதலில் மற்றதெல்லாம் பின்புதான் அந்த அளவிற்கு கோவிலின் மீதும் இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன் மீதும் அதீத பாசம் நேசம். கோவிலுக்கு மணி வாங்கி கொடுத்துள்ளார் இரண்டு கும்பாபிேஷகங்களை சீரும் சிறப்புமாக செய்துள்ளார் இப்படி தன்னால் முடிந்த தொண்டினை கோவிலுக்கு செய்து தான் உண்டு தன் இறைப்பணி உண்டு என்றிருந்தார். வயது மூப்பின் காரணமாக கோவில் நிர்வாகம் வேறு ஒருவரை கோவில் அர்ச்சகராக நியமனம் செய்தது.இதனால் அர்ச்சகருக்கு உரிய சம்பளம் கட்டானது.அதைப்பற்றி கவலைப்படாமல் கோவிலுக்கு போய் சேவை செய்து கொண்டிருந்தார்.
இவர் கவலைப்படாததற்கு காரணம் இவரது மகன் கணேசன். கிரக பிரேவேசம் போன்ற வீட்டு விசேடங்களுக்கும் வெளிக்கோவிலுக்கும் சென்று வருமானத்துடன் வந்து கொண்டிருந்தார். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் கணேசன் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மகன் கணேசன் மீது உயிரையே வைத்திருந்த சங்கர குருக்கள் நொறுங்கிப்போனார். வெளிஉலகம் தெரியாத மருமகள், கல்லுாரியில் படித்துக் கொண்டு இருக்கும் பேத்தி இவர்களின் எதிர்காலம் மட்டுமின்றி நிகழ்காலமும் கேள்விக்குறியாகவே செய்வதறியாது பழையபடி கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் குடும்ப செலவுகளை சமாளித்து வந்தார்.திடீரென இரண்டு இடிகள் மீண்டும் தாக்கியது முதல் இடி சங்கரகுருக்களின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்து தற்போது எதிரில் இருப்பவர்கள் ஒரு நிழல் மாதிரி தெரியும் அளவிற்குதான் உள்ளது, ஆகவே யாராவது அவரை கையை பிடித்து கூப்பிட்டு சென்றால்தான் உண்டு சுருக்கமாக சொல்லப்போனால் அவரையும் பராமரிக்கும் நிலமைதான். இரண்டாவது இடி கொரானா காரணமாக கோவில் மூடப்பட்டதால் அன்றாடம் பக்தர்கள் மூலம் வந்த வருமானமும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நின்று போனது. தற்போது 94 வயதாகும் சங்கரகுருக்கள் வறுமையின் உச்சத்தில் உள்ளார் தனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைக் கூட சொல்லத்தெரியாத நிலையில் உள்ளார் மருமகள் சித்ராவின் தம்பி கிருஷ்ணகுமார் சென்னையில் உள்ளார் அவர்தான் அக்கா குடும்பத்திற்கு தற்போது உதவியாக உள்ளார். வறுமயைில் வாடும், வாய்விட்டு உதவுங்கள் என்று கேட்காத இந்த 94 வயது பார்வையில்லாத அர்ச்சகரின் குடும்பத்தை வாழவைக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இது குறித்து சித்ராவிடமும் (84286 07448) கிருஷ்ணமூர்த்தியிடம் (97911 25567)மேலும் விவரம் கேட்டுப்பெறலாம். -எல்.முருகராஜ்.