பதிவு செய்த நாள்
25
மே
2020
02:05
சென்னை : நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, அனைத்து கிராமக் கோவில் பூசாரிகளுக்கும், நிவாரண நிதி அளிக்கப்பட வேண்டும் என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் கூறியதாவது:கிராமக் கோவில் பூசாரிகளுக்கு, இரண்டாவது தவணையாக, தலா, 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்ட, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரத்து, 627 பேருக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக, 3.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில், 20 ஆயிரத்து, 415 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.
எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, 13 ஆயிரம் பூசாரிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. பயனாளிகளின் வயது மற்றும் நலவாரியத்தில் புதுப்பிக்காததை காரணம் காட்டி, நிவாரணத் தொகை மறுக்கப்பட்டுள்ளது.கடந்த, 15 ஆண்டுகளாக பூசாரிகள் நலவாரியம் செயல்படாமல் முடங்கி கிடந்துள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை கண்டுக் கொள்ளவில்லை. பல காரணங்களைக் கூறி, நலவாரிய உறுப்பினர்களை புதுப்பிக்கவில்லை. எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், வேறுபாடு காட்டாமல் நிவாரண நிதி வழங்க வேண்டும். இரண்டாவது நிவாரண நிதி வழங்கும் முன், நல வாரியத்தில் பதிவு செய்திருந்த அனைத்து பூசாரிகளின் பட்டியலையும் தயாரித்து, அதன்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.