பதிவு செய்த நாள்
01
ஜூன்
2020
09:06
திருப்பதி : பொது முடக்கத்தில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏழுமலையான் தரிசனம் ஜூன் 8ம் தேதி முதல் கிடைக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருமலை ஏழுமலையான் தரிசனம், மார்ச், 20 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன், 1 முதல் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில், சில தளர்வுகளை, மத்திய அரசு அறிவித்துஉள்ளது.இதன்படி, கோவில்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை திறப்பது தொடர்பான முடிவுகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம், மத்திய அரசு விட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் ஆவலாக காத்திருப்பதால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகள், லட்டு கவுன்டர் உள்ளிட்ட இடங்களில், சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக, கோடுகள் வரையப்பட்டுள்ளன.தினசரி, 7,000 பேரை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்தும், அவர்களுக்கு, திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில், ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கி, திருமலைக்கு அனுமதிக்க, அதிகாரிகள் திட்ட மிட்டு வருகின்றனர். ஏழுமலையான் தரிசன அனுமதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என, தெரிகிறது. லட்டு முறைகேடுபக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம், ஒரு வாரத்திற்கு முன், லட்டு பிரசாத விற்பனையை துவங்கியது.
பொது முடக்கம் அமலில் உள்ளதால், லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து விற்று வருகிறது. இதற்கு பக்தர்களிடம் வரவேற்பு அதிகரித்தது. ஆறு நாட்களில், 13 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இடைத்தரகர்கள் சிலர், 25 ரூபாய் மதிப்புள்ள லட்டு பிரசாதத்தை, மொத்தமாக வாங்கி, 40 முதல் 45 ரூபாய் வரை அதிக விலை வைத்து, விற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், புங்கனுாரில் இந்த லட்டு பிரசாத முறைகேடு நடந்து வருவதாக, பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.