பதிவு செய்த நாள்
02
ஜூலை
2020
01:07
ஆத்துார்: தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடால், புது கவுரவம் கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, தம்மம்பட்டி, காந்தி நகரில், 70 குடும்பத்தினர், 300 ஆண்டுக்கு மேலாக, மரச்சிற்ப சிலை வடிவமைப்பு தொழில் செய்கின்றனர். தற்போது, 75 ஆண், 40 பெண் என, 115 சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், அழகான சுவாமி சிலைகளை, ஒரு அடி முதல், 10 அடி உயர சிலையை வடிவமைக்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி, டில்லி, கேரளா, கோல்கட்டா பொருட்காட்சிகளிலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும், சிலைகளை ஏற்றுமதி செய்கின்றனர். தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2012ல், புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசு, தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, புவிசார் குறியீடு வழங்கி, அதற்கான உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து, புவிசார் குறியீடு பெறும், 36ம் பொருளாக, தம்மம்பட்டி மரச்சிற்பம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் போலிகள் உருவாவது தவிர்த்து, தரமான சிலைகளை வாங்க முடியும். இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த, மாநில அரசின் விருது பெற்ற, சிற்பி சீனிவாசன் கூறியதாவது:
கி.பி., 1356க்கு பின், விஜயநகர பேரரசு ஆட்சியில், நலிவடைந்த இசை, கலை, கைவினை கலைகள் புத்துயிர் பெற்றன. அப்போது முதல், தம்மம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட சிற்பிகள் தங்கி, கோவில் தேர், சுவாமி சிலை, கோவில் நிலை கதவுகள், சுவாமி வாகனங்கள் செய்துவருகிறோம்.
தம்மம்பட்டியில், 300 ஆண்டுக்கு மேல் பழமையான, மரச்சிற்ப கலைகளுக்கு, புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்தோம். அதேபோல், அரும்பாவூர், கள்ளக்குறிச்சி மரச்சிற்பத்தினரும் மனு செய்தனர். 2016ல், டில்லியில் நடந்த கூட்டத்தில், ஆறு பேர் அடங்கிய, ஐ.ஏ.எஸ்., கமிட்டியினர், மூன்றில் ஏதாவது ஒரு ஊர் மட்டும் மனு அளிக்க அறிவுறுத்தினர். ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என விளக்கம் அளித்தும், அவர்கள் ஏற்கவில்லை. அதனால், அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறினார். பின், தம்மம்பட்டி உள்பட மூன்று ஊருக்கும், தனித்தனியாக விண்ணப்பிக்க, ஜெயலலிதா, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது, தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அரும்பாவூர் தேர் சிற்பத்துக்கு, கடந்த மே மாதம், புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடம் அல்லது தோற்றத்தை குறிக்கும்படி, ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், ‘புவிசார் குறியீடு’ என அழைக்கப்படும். இந்த குறியீடு, அந்த பொருளின் தரம், நன்மதிப்பு குறித்து சான்றாக விளங்கும். இக்குறியீடு பெற்ற பொருளை, சம்பந்தப்பட்ட ஊரை தவிர்த்து, மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முடியாது.