பதிவு செய்த நாள்
15
ஆக
2020
11:08
கடமையில் கண்ணாகத் திகழும் கடக ராசி அன்பர்களே!
சனிபகவான் மாதம் முழுவதும் சாதகமாக நின்று நற்பலன் கொடுப்பார். செப்.1 முதல் சுக்கிரன் நன்மை தருவார். இதனால் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். தேவையான பொருட்களை வாங்கலாம்.
ராகுவால் ஏற்பட்ட பண இழப்பு, முயற்சியில் தடை, இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். காரணம் செப்.1ல் ராகு உங்கள் ராசிக்கு 11ம் இடமான ரிஷபத்திற்கு செல்கிறார். பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். கேது 6ம் இடமான தனுசு ராசியில் இருந்து பொன்னையும், பொருளையும் தருவார் அவர் செப்.1ல் 5ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். அவரால் அரசு வகையில் பிரச்னை வரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம்.
குடும்பத்தில் புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக.29க்கு பிறகு மறையும். அதன் பிறகு சுக்கிரனால் பெண்கள் உதவிகரமாக இருப்பர். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். .அவர்களால் பண உதவி கிடைக்கும். சிலரது வீட்டில் களவு போக வாய்ப்புண்டு கவனம் தேவை.
பெண்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு பொருளாதார வளம் மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். செப்.1க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும்.
சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம். உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் போட்டியாளர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். மாத பிற்பகுதியில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆக. 31க்கு பிறகு சுக்கிரனால் சிறப்பான பலன் கிடைக்கும். திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சகபெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும்.
* ஐ.டி., துறையினருக்கு எதிர்பாராத நற்பலன் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகள் மூலம் நற்பெயர் கிடைக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி நிலையில் இருப்பர்.
* பொதுநல சேவகர்கள் நற்பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்க பெறுவர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலருக்கு விருது, பாராட்டு வந்து சேரும்.
* விவசாயிகள் கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் கரும்பு, எள், உளுந்து, கொள்ளு, கேழ்வரகு, காய்கறி வகைகள் போன்றவை மூலம் வருமானம் காண்பர். மாத முற்பகுதியில் புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.
சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் ஆக.31க்கு பிறகு அரசு வகையில் சலுகை பெற முடியாது. சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு, கமிஷன் தொழில் முயற்சியில் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம்.
* அரசு பணியாளர்கள் ஆக.29க்கு பிறகு வேலையில் கவனமுடன் இருக்கவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
* மருத்துவர்கள் வேலைப் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சற்று முயற்சி செய்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடை இல்லை
* விவசாயிகள் வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
* மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக. 17,18,21,22,28,29,30,31 செப்டம்பர் 6,7,8,9,10,13,14,15.
கவன நாள்: செப்.1,2,3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: வெள்ளை, நீலம்.
பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* வெள்ளியன்று மகாலட்சுமி வழிபாடு