பதிவு செய்த நாள்
28
ஆக
2020
03:08
சென்னை, பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலய பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஊரடங்கு காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அன்னை வேளாங்கண்ணி ஆலயம். அதன், 48வது ஆண்டு பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை, மயிலை, உயர் மறைமாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கொடி ஏற்றி, விழாவை துவக்கி வைக்கிறார். ஊரடங்கு காரணமாக, இந்த திருவிழா, மக்கள் பங்கேற்பு இல்லாமல் கொண்டாடப்படுகிறது. எனவே, பக்தர்கள் யாரும், ஆலயத்திற்கு வரவோ, கொடியேற்றத்தில் பங்கேற்கவோ முயற்சிக்க வேண்டாம்.பக்தர்கள் வசதிக்காக, கொடியேற்றம் உள்ளிட்ட நவநாள் வழிபாட்டு நிகழ்வு களும், மாதா தொலைக் காட்சியிலும், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட, சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.இவ்வாறு, அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தையான வின்சென்ட் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் வேண்டுகோள்!சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 48வது ஆண்டின் பெருவிழா, கொடியேற்றத்தன்று, வழக்கமாக நகரின் பல பகுதிகளில் இருந்து, பக்தர்கள் நடைபயணமாக சென்று பங்கேற்பர். இந்தாண்டு, தொற்று காரணமாக, ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என, ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள், கொடியேற்றத்தில் பங்கேற்க வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.