பதிவு செய்த நாள்
31
அக்
2020
07:10
அவிட்டம் 3, 4ம் பாதம் : பணவிஷயத்தில் எச்சரிக்கை
பொது : வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. சிந்தனையில் இருப்பவற்றை செயல்படுத்த நினைப்பது நடைமுறை வாழ்வினில் எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் சனியை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் குருவின் மகர ராசி சஞ்சார காலத்தில் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
நிதி : நேரத்தினை உணர்ந்துகொண்டு அடுத்தவர்களுக்கு கடனுதவி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்காக முன்நின்று செயல்படும் விஷயங்களில் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக இந்த நேரத்தில் எவரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கூடாது. கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம்.
குடும்பம் : குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உடன்பிறந்தோரின் நலனுக்காக ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். உறவினர் ஒருவரிடம் கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டு வருவீர்கள். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தினைக் காண்பீர்கள். அவர்களை நிதானித்துச் செயல்படும்படி அவ்வப்போது அறிவுரை சொல்ல வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறீர்கள்.
கல்வி : உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவினில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்கும். குரு பகவானின் அமர்வு நிலை உங்கள் எழுத்து வேகத்தினை உயர்த்தும். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்ப்பது நல்லது. இன்ஜினியரிங், மொழிப்பாடம், கலைத்துறை, வேளாண்மை, சைகாலஜி துறை சேர்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் : குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையைப் பெரிதாக்கும். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தவறாகப் புரிந்துகொண்டு குடும்ப உறுப்பினர்கள் உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வர். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம். குடும்பப் பிரச்னைகளை அண்டை அயலாரோடு விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை கணவரோடு பகிர்ந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
உடல்நிலை : ஓய்வற்ற நிலையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். ஒரு சிலருக்கு சிறுநீரகக் கோளாறுகள், பித்தப்பையில் கற்கள் போன்ற பிரச்னைகள் தோன்றலாம். தினசரி தண்ணீரை காய்ச்சிப் பருகுவது நன்மை தரும்.
தொழில் : உழைப்பதற்கு ஏற்ற பலன் இல்லையே என்ற வருத்தம் மார்ச் 3ம் தேதி வரை இருந்து வரும். மார்ச் 3ம் தேதிக்குப் பிறகு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. ஆயினும் ஜூன் மாதத்திலிருந்து இன்னமும் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உங்களை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவார்கள். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். கட்டுமானப் பொருட்களின் வியாபாரிகள் தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
பரிகாரம் : சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.
சதயம் : பொறுமை பெருமை தரும்
பொது : பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற நிலையைத் தந்தாலும் நீங்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்கள் என்பதால் கவலை இல்லை. அதிகாரப்போக்கும் அவசரமும் அதிக இழப்பினத் தந்துவிடும். மதியூகமும், நிதானமும் மட்டுமே தற்போதைய சூழலில் துணைநிற்கும். சனியை ராசி அதிபதி ஆகக் கொண்டிருந்தாலும் ராகுவை நட்சத்திர அதிபதி ஆகக் கொண்டிருப்பதால் கும்ப ராசிக்காரர்களில் சதயத்தில் பிறந்தவர்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குரு, சனி ஆகியோர் சிரமத்தைத் தந்தாலும் ராகுவின் பலம் உங்களைக் காப்பாற்றும். அதிர்ஷ்டத்தின் அளவு குறைந்தாலும் உங்கள் தனித்திறமையின் காரணமாகவும் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாகவும், எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து வருவதன் மூலமாகவும் வெற்றி காண்பீர்கள்.
நிதி : கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுத்துவிடாதீர்கள். அதேபோல, அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வாய்ப்பும் உள்ளது. நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது. அடுத்தவர்களுக்காக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதையும், தனது பொருளை அடமானம் வைத்து அவர்கள் பட்ட கடனை அடைப்பதையும் முடிந்த வரை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளிழப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது.
குடும்பம் : குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்காக திட்டமிடுவீர்கள், வருகின்ற மே மாதத்திற்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அவரிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவருக்குச் செய்வீர்கள்.
கல்வி : மாணவர்கள் சிறப்பானதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உங்களுடைய அசாத்தியமான ஞாபக சக்தி உங்களுக்கு துணை நிற்கும். ஆயினும் கூடுதலாக எழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வேகமாக எழுதும் கலையையும் வளர்த்துக் கொண்டீர்களேயானால் சிறப்பானதொரு வெற்றி நிச்சயம். விலங்கியல், விவசாயம், வரலாறு, கிரிமினாலஜி, மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
பெண்கள் : நினைத்ததை உடனுக்குடன் சாதிக்க நினைத்து வேகமாக செயல்படுவீர்கள். பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் உடனடியாக காரியத்தில் இறங்குவதால் வருத்தமே மிஞ்சும். வீட்டினில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை சேர்க்க அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமைவதால் அநாவசியமாக உடன் இருப்பவர்கள் மீது உங்கள் கோபத்தினை வெளிப்படுத்துவீர்கள். கணவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும்.
உடல்நிலை : அளவுக்கதிகமான டென்ஷனும், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதாலும் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்றக்கூடும். எலும்பு முறிவு அல்லது எலும்பு மஜ்ஜைகளில் பிரச்னை, மூட்டுகளில் தொந்தரவு ஆகியவற்றால் அவதிப்பட நேரிடும். வண்டி, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
தொழில் : உத்யோக ரீதியாக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொறுமையுடன் இருந்தால் வெற்றி காண இயலும். ஜூன் முதல் நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு உதவியாளர்களின் துணையோடு அலுவல் பணியினை செய்துமுடிப்பீர்கள். இருந்தாலும் காரியம் ஆகவேண்டும் என்றால் அடுத்தவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக இறங்க வேண்டிய சூழலே நிலவுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மே மாதத்தின் பிற்பகுதியில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் இந்த நேரத்தில் நல்ல நிலையினை அடைவார்கள்.
பரிகாரம் : ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு வருவது நன்மை தரும்.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : ஆன்மிக சுற்றுலா செல்வீங்க
பொது : குருவின் விரய ஸ்தான சஞ்சாரத்தினால் ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதுாரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். விடை தெரியாத கேள்விகளால் மனதில் குழப்பமான சூழல் நிலவி வரும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். உறக்கத்தின்போது அவ்வப்போது கனவுத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். அநாவசிய சிந்தனைகளால் மனதில் ஒருவித பய உணர்வு இடம்பிடிப்பதை தவிர்க்க இயலாது. குருவை நட்சத்திர அதிபதி ஆகவும், சனியை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இவ்விருவரின் சாதகமற்ற சஞ்சாரம் சற்றே சிரமத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
நிதி : சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவிற்கு முன்னர் செலவுகள் காத்திருந்தாலும் சிக்கனத்தையும் கடைபிடிப்பீர்கள். அரசாங்க வங்கிகள் மூலமாகக் கடன் பெறக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் செலவழிப்பீர்கள். எதிர்கால நலனுக்காக நீண்ட கால சேமிப்பில் இறங்க முற்படுவீர்கள். ஒரு புறம் ராகு பொருளாதார நிலையை உயர்த்தினாலும் மறுபுறம் விரய ஸ்தான குருவினால் எதிர்பாராத வகையில் தவிர்க்க முடியாத செலவுகளையும் சந்திப்பீர்கள்.
குடும்பம் : உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்காக அவர்களை விட்டு பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினரிடையே முக்கியத்துவம் இழப்பதாக உணர்வீர்கள். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாது உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாக வெளிப்படுத்திவிடுவது நல்லது. சுபவிரயம் உண்டு என்பதால் சுபநிகழ்ச்சிகள் நடக்கக் காண்பீர்கள்.
கல்வி : மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதி முடிக்க கூடுதல் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்வு நேரத்தில் கிரஹ நிலை சாதகமாக இருப்பதால் கூடுதல் வேகத்துடன் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. பொறியியல்துறை, ஆசிரியர் பயிற்சி, கணிப்பொறி அறிவியல் போன்ற துறையில் படித்து வரும் மாணவர்கள் ஏற்றம் காணுவார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவ்வப்போது ஒரு சில தடைகளை சந்தித்து வந்தாலும் மே மாதத்தின் இறுதியில் தடைகள் நீங்கப் பெற்று வெற்றி காண்பார்கள்.
பெண்கள் : அவ்வப்போது மனதினில் குழப்பங்களும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும். உங்கள் குடும்ப பிரச்னைகளை உறவினர்கள் மத்தியில் வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கும் உறவினர்களுக்கு சாதகமான வாய்ப்பாக உருவாகிவிடும். உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கொண்டே உங்களை எளிதில் வீழ்த்தி விடுவார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்து வரவும்.
உடல்நிலை : உணவுப் பழக்கத்தில் நிலவும் கட்டுப்பாடின்மையால் அவ்வப்போது உடல்நிலையில் அசதி தோன்றும். நரம்புத் தளர்ச்சி, கைகால் வலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அதிகம் அவதிப்பட நேரிடும். கீரை வகைகளையும். புரோட்டீன் சத்து மிக்க பருப்பு வகைகளையும் ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. காபி, டீ போன்றவற்றையும் நொறுக்குத் தீனி வகைகளையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
தொழில் : வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சற்று சிரமம் காண்பார்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவல் பணிகளில் மேலதிகாரிகளின் உதவி கிட்டாது போகும். அதே நேரத்தில் கீழ்நிலைப் பணியாளர்கள் துணை நிற்பார்கள். உங்களது தனித்திறமையின் காரணமாக கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துவிடுவீர்கள் என்றாலும் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போக வேண்டியது அவசியமாகிறது. சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லறை வணிகம் சிறக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள்.
பரிகாரம் : பிரதோஷ நாட்களில் நந்தியம்பெருமானை வழிபட்டு வாருங்கள்.