பதிவு செய்த நாள்
30
ஏப்
2021
09:04
திருச்சி:தமிழகத்திலேயே மிகவும் உயரமான, 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
சென்னை, நங்கநல்லுாரில் ஆஞ்சநேயருக்கு, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 32 அடி உயர சிலை உள்ளது. இது தான், தமிழகத்தில் மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலை, அடுத்ததாக, நாமக்கல்லில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன், கோவில் உள்ளது.
இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில், தமிழகத்தில் மிகவும் உயரமான, 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, கோவில் மற்றும் பீடம் அமைக்கப்பட்டு வருகிறது. மே மாதம் இறுதிக்குள் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக, ஆஞ்சநேயர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நிர்வாக அறங்காவலர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன், 65, தெரிவித்தார். இவர், ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில், 40 ஆண்டுகளாக, 2.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை வைத்து, வழிபாடு நடத்தி வருகிறார்.அவர் கூறியதாவது:மே மாத இறுதிக்குள் சிலை அமைக்கும் பணிகள் முடிந்துவிடும். இதற்காக, நாமக்கல் அருகில் ஒரே அளவு கல் வாங்கப்பட்டு, அதில் கலை நயத்துடன் சிலை வடிக்கும் பணிகள் முடிந்துள்ளன.சிலையை திருச்சி கொண்டு வரவேண்டியது தான் பாக்கி. திருச்சி மேலுாரில் கொள்ளிடம் கரையோரம் இடம் உள்ளது. அங்கு தான் கோவில் கட்டி, சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.