பழநி: பழநி பகுதியில் தொன்மையான கருவியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்துள்ளார்.
பழநி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. பழநியை சுற்றிலும் பல பகுதிகளில் தொன்மையான தொல்லியல்சின்னங்கள் மற்றும் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் பழநி, சண்முக நதி மேற்கு பகுதி ஆற்றங்கரையில், மானூர் பழநியிலிருந்து மானூர் செல்லும் வழியில் உண்மையான கற்கால கல் கருவி கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "இக்கருவி புதிய கற்கால வகை கருவியாகும் .இதில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "தெந்னாடாந்" என வாசிக்கும் வகையில் அமைந்துள்ள எழுத்துக்கள் ஒரு சென்டிமீட்டர் உயரமும் 0.5 சென்டிமீட்டர் ஆழமும் கொண்டவையாக உள்ளது. குறில், நெடில் குறிகள் எழுத்துக்களுடன் இணைந்து இல்லாமல் தனியாக உள்ளது. இந்த எழுத்துக்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கூர்மையான தாமிர பொருளைக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழின் தொன்மை நிரூபிக்கப்படுகிறது. கல் கருவியானது முழுமையாக இல்லாமல் முனைப்பகுதியும், கைப்பிடி பகுதியும் சேதமடைந்து கிடைத்துள்ளது. மேலும் இக்கல் இரும்புத்தாது மற்றும் மேக்னசைட் சேர்ந்த பாறை வகையைச் சேர்ந்தது. உறுதி தன்மை மிக்கது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் "தென்னாடன்" எனும் இடப்பெயரை பொருத்தி வழங்கப்படும் பெயராக உள்ளது. இது பொதுவாக தமிழர்களிடையே அவர்கள் வாழும் பகுதியை குறித்து குறிப்பிடப்படும் வழக்கமாகும்.