பதிவு செய்த நாள்
21
ஜூன்
2021
05:06
பெரம்பலுார்: அரியலுார் அருகே, வீடு கட்ட குழி தோண்டியபோது 9 அடி உயரமும், மூன்றே முக்கால் அடி அகலமும் கொண்ட பெருமாள் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
அரியலுார் மாவட்டம், கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,41, விவசாயியான இவர் வீடு கட்ட அஸ்திவாரம் அமைப்பதற்காக அவரது இடத்தில் குழி தோண்டினார். சுமார் ஆறு அடி ஆழத்திற்கு தோண்டியபோது, சிலை ஒன்று தலைகுப்புற வாக்கில் மண்ணில் புதைந்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பொக்லைன் மூலம் சுற்றிலும் குழி தோண்டப்பட்டு கற்சிலை வெளியே எடுக்கப்பட்டது. 9 அடி உயரமும், மூன்றே முக்கால் அடி அகலமும் கொண்ட பெருமாள் சுவாமி சிலையை மண்ணுக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது.
இந்த சிலைக்கு கரையான்குறிச்சி கிராம பொதுமக்கள் பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். தகவலறிந்த, வருவாய்த்துறை அலுவலர்கள் கரையான்குறிச்சி கிராமத்திற்கு வந்து கொண்டு செல்ல சிலையை எடுத்தனர். அப்போது, கிராம பொதுமக்கள் தாங்கள் வழிபாடு செய்வதால், சாமி சிலையை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமானுார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன் பின்னர் வழிபாடு செய்ய சிலை வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.