பதிவு செய்த நாள்
14
செப்
2021
11:09
மைசூரு : உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானை தலைமையில் எட்டு யானைகள், நாகரஹொளே வனப்பகுதியிலிருந்து மைசூரு நகருக்கு நேற்று புறப்பட்டன. மைசூரு தசரா விழா அக்டோபர் 7ல் ஆரம்பித்து 16 வரை நடக்கிறது.
இறுதி நாளில் சாமுண்டீஸ்வரி ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும். உலகப் புகழ்பெற்ற இந்த தசரா விழாவில் யானைகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், தங்க அம்பாரி சுமக்கும் அபிமன்யூ யானை உட்பட எட்டு யானைகளுக்கு, நாகரஹொளே தேசிய பூங்காவின் வீரேனஹள்ளி கிராமத்தில் நேற்று பூஜை நடத்தப்பட்டது.மைசூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் மலர் துாவி, காட்டிலிருந்து நகருக்கு அனுப்பி வைத்தார்.அபிமன்யூவுடன், அஸ்வதாமா, தனஞ்செயா, விக்ரமா, காவேரி, சைத்ரா, லட்சுமி, கோபாலசுவாமி ஆகிய யானைகள், லாரிகளில் மைசூரு நகருக்கு புறப்பட்டன.மைசூரு மேயர் சுனந்தா பாலநேத்ரா, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, ஹுன்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், மாவட்ட பஞ்., தலைமை செயல் அதிகாரி யோகேஷ், எஸ்.பி., சேத்தன் உட்பட வனத்துறை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.வரும் 16ல் மைசூரு நகருக்கு யானைகள் வரவுள்ளன. அப்போதும், மலர் துாவி உற்சாகத்துடன் வரவேற்கப்படும். பின், அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கான ஒத்திகை நடத்தப்படும்.