பதிவு செய்த நாள்
01
அக்
2021
10:10
சிவகாசி: பிள்ளை வரம் கிடைக்கவும், குழந்தைகளுக்கு பேச்சு வரம் கிடைக்கவும் சிவகாசி பேச்சியம்மனை வழிபட்டாலே இவை அனைத்தும் நடக்கிறது. சிவகாசி பி.கே.என்., ரோடு முருகன் காலனியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக அம்மன் தோன்றினார். அப்பகுதி மக்கள் வழிபட கேட்ட வரம் கிடைத்து வந்தது. தொடர்ந்து 1987ல் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு சிலை வைத்து வழிபட்டனர்.
இங்கு எங்கும் இல்லாத ரூபத்தில் பேச்சியம்மன் நாயகியாக காட்சியளிக்கிறார். கன்னியாகுமரி முதல் கைலாசம் வரை இந்தியாவில் இருக்கக்கூடிய சக்தி பீடங்கள், பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களின் பிம்பத்தை உள்ளடக்கிய ஒரே ஆலயமாக பேச்சியம்மன் கோயில் விளங்குகிறது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் பேச முடியாத, சிறுவயதிலிருந்தே திக்கி பேசும் குழந்தைகளுக்கு பேச்சு வரம் தருகிறார். தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்கு அம்மனை வேண்டினால் உடனடியாக வரம் கிடைக்கிறது. கோயிலுக்குள் நுழைந்தால் நம்மை அறியாத பரவசம் ஏற்படுகிறது.பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக லிங்கம், பஞ்ச முக ஆஞ்சநேயர், தன்வந்திரி, தத்தாத்ரேயர், விநாயகர் முதல் பைரவர் ஒரே இடத்தில் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு சுவாமியையும் வழிபட ஒவ்வொரு கோயிலாக செல்வதற்கு பதில் பேச்சியம்மன் ஆலயம் அந்த அனைத்து சுவாமிகளையும் ஒரே இடத்தில் வணங்கி அனைத்து பலன்களையும் பெறலாம்.நவராத்திரி விழாவின் பத்து நாட்களும் பேச்சியம்மன் பத்து விதமான அம்பிகை அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். மாசி மாதம் கடைசி வாரத்தில் அம்பிகைக்கு கொடியேற்றி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. அனைத்து தமிழ் மாத கடைசி செவ்வாயில் 108 விளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் மாதாந்திர வெள்ளி , சங்கடகரசதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷ பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை 6:00 - -11:00 மணி, மாலை 5:00 - -இரவு 9:00 மணி வரை நடை திறந்திருக்கும்.