பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
பெரிய திருவடியாகிய கருடனை செலுத்துகிறவனாய், அழகான ரத்தினங்கள் அமைந்த, புள்ளிகளை உடைய படத்தோடு கூடிய ஆதிசேடன் மீது துயில்பவரும், மூன்று தீயால் போற்றப்படும் வேதங்களால் உறுதிப்படுத்தப்படுபவனும், பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உண்ட சிவபிரானுக்கும் தலைவனாய் உள்ளவனும் ஆன, எங்கள் பெருமான் திருவத்தியூர் என்னும் திவ்ய தேசத்தில்(காஞ்சியில்) எழுந்தருளியுள்ளான், என்று பூதத்தாழ்வாரால் பாடப்பட்ட, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காண உள்ளது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், முக்கியமானது வரதராஜப் பெருமாள் கோவில் என அழைக்கப்படும் தேவராஜசுவாமி கோவில். தேவராஜன், அத்திகிரி ஆழ்வார், அருளாளப் பெருமாள், தேவப் பெருமாள், பேரருளாளன் என பல்வேறு நாமங்களால் அழைக்கப்படும் வரதராஜப் பெருமாள், "ஹஸ்திகிரி சைலம் என்ற சின்ன காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ளார். திக்கஜங்கள் பெருமாளை ஆராதித்ததால், அத்திகிரி என பெயர் பெற்ற இத்தலத்தில், பிரம்மனுக்கு வரம் கெடுத்த வரதராஜர், கிரியின் அடிவாரத்தில் அழகிய சிங்கரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வெட்டுக்கள்: மொத்தம், 28 ஏக்கரில் அமைந்துள்ள இக்கோவில், 108 வைணவத் தலங்களில் மூன்றாவதாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள், மூலிகை ஓவியங்கள், கல்வெட்டுகள் நிறைந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, 362 கல்வெட்டுக்கள் இக்கோவிலில் தான் காணப்படுகின்றன. சேர, சோழ, விஜயநகர மன்னர்கள் பல்வேறு உபயங்களை செய்துள்ளதை இக்கல்வெட்டுக்கள் தான் இன்றைக்கும் பறை சாற்றுகின்றன.
வட இந்திய பாணி: ஜகதி என்ற உயர்ந்த அடிமட்டச் சதுக்கத்தின் மீது, மையத்தில் கோவில் எழுப்பப்படும் வட இந்திய பாணியில், முதலாம் ராஜராஜ சோழனால்(கி.பி.1018-1054) வரதராஜ பெருமாள் கோவில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பிரகாரத்தில், மூலவர் நின்ற நிலையில், மேற்கு நோக்கி, அத்தியூர் ஆழ்வாராக காட்சி தருகிறார். மேற்கில், யோக நரசிம்மன் குடைவரை அமைப்பில் அருள் பாலிக்கிறார். இரண்டு ராஜகோபுரங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள் உள்ளன. மேற்கு ராஜகோபுரம் 96 அடி உயரம், 92.5 அடி அகலமும், கிழக்கு ராஜகோபுரம் 125 அடி உயரம், 99 அடி அகலமும் கொண்டது. நகர் முழுவதும் கோவிலுக்கு மேற்புறமிருப்பதால், நகரத்தை கடாசித்து எழுந்தருளியிருப்பதாக, பெரியோர் பாடியிருக்கின்றனர். எல்லா உற்சவங்களிலும் புறப்பாடு மேற்கு கோபுர வாயில் வழியாகவே நடைபெறும்.
நூறு கால் மண்டபம்: ஹொய்சாள மன்னன் வீர பல்லாளன், காளிங்கராயன், பாண்டிய மன்னரான ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள்(1018-1246), சேர மன்னர்கள்(1291-1342), ஆகியோரும் பெருமாளை வணங்கி, தங்கள் எண்ணம் ஈடேறி, கோவிலில் பல திருப்பணிகளை செய்துள்ளனர். விஜயநகரப் பேரரசு காலத்தில், பல கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது, அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய நூறு கால் மண்டபம்.
கிளைவ் மகரகண்டி: இந்தியாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர, முக்கியக் காரணமாக இருந்த, ராபர்ட் கிளைவ், ஆற்காடு நவாப்பை எதிர்ப்பதற்காக, படைகளை நடத்தி சென்றபோது, கோவில் வளாகத்தில் உள்ள தோட்டத்தில் தங்கினார். அந்தத் தோட்டம் இன்றும் துரை தோட்டம் என அழைக்கப்படுகிறது. அப்போது, கிளைவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. கோவில் பட்டர், பெருமாள் திருவடி தீர்த்தத்தை வழங்கினார். அதைப் பருகிய கிளைவிற்கு, உடனே காய்ச்சல் நின்றது. பெருமாளுக்கு நன்றி கூறிய கிளைவ், ஆற்காடு போரில் வெற்றி பெற்றால், விலையுயர்ந்த பொருளை, காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி பெற்ற கிளைவ், தங்கம், வைரம், கெம்புக்கல், ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மகர கண்டிகை எனப்படும், விலை உயர்ந்த ஆரத்தை, பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினான். இந்த மகர கண்டிகை, "கிளைவ் மகர கண்டிகை என அழைக்கப்படுகிறது. கருடசேவை, தேரோட்டம் போன்ற முக்கிய விழாக்களின்போது மட்டும், பெருமாளுக்கு மகர கண்டிகை அணிவிக்கப்படும்.
துராய் ஆபரணம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கர்னல் லயோனல் பிளேஸ், பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், நாச்சியார் கோலத்தில் வந்த பெருமாளை கண்டு வியந்தார். உடனே பெருமாளுக்கு நெற்றிச்சுட்டி, துராய், சூரியன், சந்திரன் போன்ற ஆபரணங்களை வழங்கினார். இவை தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்டவை. பெருமாளுக்கு சவுரி முடியைக் கொண்டு அலங்காரம் செய்யும்போது, பிளேஸ் கொடுத்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. அதேபோல் டில்லி ஆலம்கீர்பாஷா போன்ற மாற்று மதத்தினரும், பெருமாளுக்கு காணிக்கை அளித்துள்ளனர்.
யாகசாலை பூஜைகள் துவக்கம்: பல்வேறு சிறப்புகளைப் பெற்ற, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், ஒட்டுமொத்தமாக அனைத்து சன்னதிகளுக்கும், எப்போது கும்பாபிஷேகம் நடந்தது, என்ற விபரம் தெரியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேலிருக்கும், எனக் கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். அவ்வப்போது சிறிய சன்னதிகளுக்கு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, கோவிலில் ஒட்டுமொத்த கோபுரங்களை புதுப்பிக்க முடிவு செய்து, திருப்பணி துவக்கப்பட்டது. திருப்பணி முடிந்து, நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. கும்பாபிஷேக நாளான 5ம் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை யாக சாலை பூஜைகள் நடைபெறும்.