சபரிமலை : சபரிமலை காணிக்கை உள்ளிட்ட வருமானம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் தொடக்கத்தில் இரண்டாயிரம் பேரும், பின்னர் ஐந்தாயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சீசனில் தொடக்கம் முதலே 30 ஆயிரம் பகர்தகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கேற்ப சபரிமலையில் தேவசம்பேர்டின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் ஐந்து கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பெருமழை மற்றும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடந்த ஆறு நாட்களில் தினசரி தலா ஏழாயிரம் பக்தர்கள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இனி வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பம் அரவணை விற்பனை மற்றும் காணிக்கையில் ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒன்றே கால் லட்சம் டின் அரவணை, 40 ஆயிரம் பாக்கெட் அப்பம் விற்பனையாகியுள்ளது. நடை திறந்த பின்னர் சபரிமலையில் கடைகள் ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கொரோனா காரணமாக தனலெட்சுமி வங்கி மூலம் ஆன்லைன் காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சபரிமலை வருமானம் மேலும் அதிகரிக்கும் என்றும் சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் கூறினார். மழை முழுமையாக ஓய்ந்த பின்னர் தினமும் 50 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது பற்றி பரிசீலனை நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.