பதிவு செய்த நாள்
30
நவ
2021
11:11
சென்னை :போதிய வருமானம் இல்லாத, 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில், ஒரு கால பூஜை நடப்பதற்கு ஏதுவாக, 129.59 கோடி ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். போதிய வருமானம் இல்லாத கோவில்களில், ஒரு கால பூஜையாவது நடக்க ஏதுவாக, பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து, நிதியுதவி செய்யும் விதமாக ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது.இந்நிதியின் கீழ், 5 கோடி ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து, கோவில்களில் ஒரு கால பூஜை நடத்த நிதியுதவி வழங்க வழிவகை செய்யப்பட்டது.
தற்போது, ஒரு கால பூஜை நடக்கும், 12 ஆயிரத்து 959 கோவில்களுக்கு, வைப்பு நிதியாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை 2 லட்சம்ரூபாயாக உயர்த்தி, 129.59 கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்ய, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். அந்நிறுவனத்தின் தலைவர் அதுல்யமிஸ்ரா பெற்றுக் கொண்டார். இதன் வழியே, கோவில்களுக்கு கூடுதலாக வட்டித்தொகை கிடைக்கும். பூஜை பொருட்களை தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில், நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு கால பூஜை மேற்கொள்ளும் கோவில்களின் அர்ச்சர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.