பதிவு செய்த நாள்
13
ஜன
2022
03:01
பழநி: பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் கடந்த 4 நாட்களாக அதிக அளவில் பழநியில் வருகை புரிகின்றனர். அடிவாரம் பகுதி ஆக்கிரமிப்பால் அவதிப்படுகின்றனர்
பழநியில் தைப்பூச திருவிழா ஜன.12ல் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறை படி (ஜன.,14,) முதல் ஜன., 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி அரசு இல்லை என அறிவித்ததுள்ளது. பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து அதிக அளவில் வருகை புரிகின்றனர். இதனால் பழநி நகரம் திக்குமுக்காடியது. கோயில் தரிசனம் வழியில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் சிரமம் அடைந்தனர்.
ஆக்கிரமிப்பு: பழநி மலைக்கோயில் அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அலகு குத்தி, காவடிகள், பறவைக் காவடி, தீர்த்த குடம் எடுத்து வரும் பக்தர்கள் அந்த வீதிகளில் நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்தனர்.
போலி வழிகாட்டிகள்: பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் முடி எடுக்கவும், கோயிலுக்குச் செல்ல சரியான பாதையை கண்டறியவும் முயலும்போது போலி வழிகாட்டிகள் அவர்களை மறித்து பணம் பறிக்க முயல்கின்றனர். ஏமாறும் பக்தர்கள் பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்: கூட்டம் அதிகமாக உள்ளதால் கிரிவீதி பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் அடைந்தனர் இதனால் போக்குவரத்து நெரிசல் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. குளத்து ரோடு, பூங்கா ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.
பேருந்துகளில் நெரிசல்: பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல பஸ்களில் ஏறி இடம்பிடிக்க பஸ் ஸ்டாண்ட் வாயில் பகுதிகளில் குவிந்தனர். பெரும்பாலும் பேருந்துகளில் அதிக கூட்டத்துடன் பயணித்தனர்.
சமூக விலகல் கேள்விக்குறி: நாளொன்றுக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து திரும்புகின்றனர். கோயில் நிர்வாகம் பக்தர்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தியுள்ள நிலையில் அதிக கூட்டத்தினால் சமூகவிலகல் கேள்விக்குறியாகியுள்ளது. போலீசார், கோயில் நிர்வாகம் ஒத்துழைப்பு: போலீசார் பக்தர்களுக்கு தகுந்த வழிகாட்டிகளாகவும் கூட்டம் அதிகம் சேரும் போது அவர்களை தடுத்து நிறுத்தி குழுவாக மலைக்கோயிலுக்கு அனுப்பினர் இதனால் பக்தர்கள் கூட்டம் மலைக்கோயிலில் கட்டுப்படுத்தப்பட்டது. கோயில் நிர்வாகத்தினர் வரிசையில் காத்திருந்து வரும் வரும் பக்தர்களை விரைவாக தரிசனம் செய்து செல்லவும், மலைக்கோயிலில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.