பதிவு செய்த நாள்
17
ஜன
2022
05:01
உடுமலை : பொங்கல் திருவிழாவையொட்டி, ஆல்கொண்டமால் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது; பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அப்பகுதி வெறிச்சோடியது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் நடக்கும் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.கால்நடை வளம் பெருக, பாலாபிேஷகம் செய்து, உருவாரங்களை வைத்து வழிபாடு செய்வார்கள். தை முதல் நாளில், மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்குஉரியது என கோவிலுக்கு தானமாக அளிக்கும் நடைமுறை இன்றும் தொடர்கிறது.மேலும், மார்கழி மாதம் முழுவதும், கிராமங்களில், பராமரிக்கப்படும் சலகெருதுகளை கோவிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜை நடத்துவார்கள். சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ரேக்ளா வண்டிகளில், வந்து பங்கேற்பார்கள். திருவிழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, நடப்பாண்டு, அரசின் ஊரடங்கு உத்தரவால், ரத்து செய்யப்பட்டது. உருவாரங்கள் வைத்து வழிபடவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று கோவிலில், ஆல்கொண்டமாலனுக்கு, பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல், பாலாபிேஷகம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது; பின்னர் கோவில் நடைசாத்தப்பட்டது.ஊரடங்கு உத்தரவை மீறி கோவிலுக்கு வருபவர்களை தடுக்க, பெதப்பம்பட்டி நால்ரோடு, சோமவாரப்பட்டி உட்பட பல இடங்களில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வரும், 18ம் தேதி வரை, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; அதன்பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி பூஜைகள் நடைபெறும், என இந்துஅறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.