வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை மாத பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் வழக்கம்போல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்றி சதுரகிரி மலை அடிவாரம் தாணிப்பாறை வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் மதியம் 2:00 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோவில் பூசாரிகள் பவுர்ணமி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன், கோவில் பூசாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.