பதிவு செய்த நாள்
27
ஜூலை
2012
10:07
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைத்துஇருக்கும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். செல்வ வளம் பெருகும். கன்னிப்பெண்களுக்கு மணவாழ்வு தேடிவரும். எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். விரதம் இருப்போர் பாராயணம் செய்யும் வகையில் லட்சுமி ஸ்தோத்திரம் இங்கு இடம்பெற்றுள்ளது.
* நாராயணனின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமித்தாயே! செல்வத்தை வாரி வழங்குபவளே! நன்மைக்கு இருப்பிடமாய் திகழ்பவளே! உன்னுடைய கடைக்கண்ணால் எங்களுக்கு அருளை வாரி வழங்குவாயாக.
* கருநெய்தல் மலர் போல அழகு மிக்க கண்களை உடையவளே! அரச பதவியும், இந்திர பதவியும் வழங்குபவளே! உன் பார்வையால் எங்கள் வாழ்வு வளம் பெறட்டும்.
* தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக. பார்க்கவ முனிவரின் மகளாக அவதரித்தவளே! திருமாலின் மார்பில் மின்னல் கொடியாய் விளங்குபவளே! உன்னருளால் எங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.
* கடலரசனின் மகளே! எல்லா வளங்களையும் ஒருசேர அருள்பவளே! உன் கடைக்கண் பார்வை எங்கள் மீது பரவட்டும். ஆளுகின்ற தலைமைப் பதவியும், விரும்பிய பொருள் வளமும் எங்களை வந்து அடையட்டும்.
* நாராயணனின் துணைவியே! கார்மேகம் போன்ற அருட் கண்களால் எங்கள் இல்லங்களில் செல்வ மழை பொழியச் செய்வாயாக.
* நாமகளாய் கல்வியையும், பூமகளாய் செல்வத்தையும், மலைமகளாய் வீரத்தையும் வழங்கும் தாயே! நல்ல செயல்களுக்குரிய நற்பலனை வழங்கும் வேத நாயகியே! உன்னை அடிபணிந்து வணங்குகிறோம்.
* தாமரை முகம் கொண்டவளே! சந்திரன், அமுதம் இவற்றோடு பிறந்தவளே! உயிர்களை காப்பவளே! தாமோதரனின் துணை வியே! முப்பத்து முக்கோடி தேவர்களால் வணங்கப்படுபவளே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்.
* மனதிற்கு இனியவளே! ஆடை, ஆபரணங்களைச் சூடி மகிழ்பவளே! நறுமணம் கமழ்பவளே! உன் அருளுக்குத் தகுதியான எங்களுக்கு மஞ்சள், குங்குமம் நிலைத்திருக்க அருள் செய்வாயாக!