பிரான்மலையில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2022 04:04
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இங்குள்ள மங்கைபாகர் தேனம்மை கோயிலில் மத்திய தளத்தில் வடுக பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பி.மதகுபட்டி கிராமத்தார்கள் சார்பில் ஜெயந்தன் பூஜை சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் வடுக பைரவர் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இத்திருவிழாவிற்கு வெள்ளி தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு 60 கிலோ வெள்ளியை கொண்டு 15 அடி உயர வெள்ளித்தேர் புதிதாக செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்டம் இன்று நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். காலை 10:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வெள்ளோட்டம் நடந்தது. இன்று ஜெயந்தன் பூஜை நடக்கிறது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு பால்குட ஊர்வலமும் இரவு 8:00 மணிக்கு வடுக பைரவர் திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.மதகுபட்டி கிராமத்தினர் செய்து வருகின்றனர்.