காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 05:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங் கால் மண்டபம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ஆயிரங் கால் மண்டபம், எந்த பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடந்தது.இந்த மண்டபத்தின் மேல் தளத்தில், பங்குனி உத்திர திருவிழாவின் போது சுவாமி திருக்கல்யாணம் நடப்பது வழக்கம்.பாதுகாப்பு கருதி, மற்ற நாட்களில் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆயிரங்கால் மண்டபம் 2011ல் 50லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருங்காட்சியகம் செயல்பட அனுமதி கேட்டிருந்தனர். அறநிலையத் துறை அனுமதி வழங்கவில்லை. பின் ஆயிரங்கால் மண்டபம் பூட்டியே கிடந்தது.பங்குனி திருவிழாவின் போது சுவாமி, ஆயிரங் கால் மண்டபத்தின் வழியாகத்தான் வெளியில் வருவார். பின் அங்கு யாரும் செல்வதில்லை.
இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காஞ்சிபுரம் அடுத்த திருப்புலிவனம் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார்.கோவில் நிலத்தை அளக்கும் பணியை பார்வையிட சென்றவரிடம், செய்தியாளர் ஒருவர், ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரம் கால் மண்டபம், மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லையே? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அமைச்சர் உத்தரவுபடி நேற்று முன்தினம் காலை ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது.கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:கோவில் பணிகளை செய்ய, ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஆயிரங்கால் மண்டபத்தை திறந்து, பாதுகாப்பு பணிக்கு ஆட்கள் போட வேண்டிய நிலை இருந்தது. அதனால் மண்டபம் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.