பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
10:07
கோயிலுக்குள் சென்று ரங்கவிலாச மண்டபத்தை கடந்தபின் வரும் ஐந்தாம் பிரகாரமான அகளங்கன் திருச்சுற்று எனப்படும் கோயில் அலுவலகம் இருக்கும் பகுதியில் கிழக்கு கடைசியில் இருக்கிறது, எம்பெருமானார் என்று வைணவர்களால் அன்போடு அழைக்கப்படும் உடையவர்-ராமானுஜர் சன்னதி. வைணவ திவ்வியதேசங்களுக்கு ஆற்றிய பெரும் சேவையைக் கருத்தில் கொண்டு அக்கோயில் நிர்வாக-நியமங்கள் யாவும் இவர் பொறுப்பில் வந்தன. இதனால் இவர் அனைத்து திவ்வியதேசங்களுக்கும் உடையவர் என்றானார். ‘உடையவர்’ என்றால் உரிமையுள்ளவர் என்று பொருள்படும். ஸ்ரீரும்பெரும்புதூரிலே பிறந்து, ஸ்ரீரங்கத்திலே வைகுந்த பிராப்தியடைந்த இவர், வேற்று மதத்தவரின் கொடுமைகளைக் காண சகிக்காமல்,சிலகாலம் மேல்கோட்டை எனும் திவ்விய தேசத்தில் தங்கியிருந்தார்.
பின்னர் நிலைம சீரான பின் அவர் மீண்டும் வைணவத் தொண்டாற்ற தேசசஞ்சாரம் புறப்படுகையில், அதுநாள் அவரை பாதுகாத்து சேவை செய்திருந்த அடியார்கள், அவரைவிட்டுப்பிரிய மனமில்லாமல் கலங்கி நின்றனர், அப்போது எம்பெருமானார், தன்னைப்போல் ஒரு உருவத்தைச் செய்து, அதை அவர் கட்டித்தழுவி, பின்னர் அந்த விக்கிரகத்தை அவர்களிடம் கொடுத்து, நான் இங்கிருந்து செல்வதாக இனி நீங்கள் எண்ணி வருந்தவேண்டாம், இந்த உருவத்தில் நான் இருப்பதாகக் கருதி நீங்கள் எப்போதும் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று கூறினார், அவர்களும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று அங்கேயே ஒரு சன்னதி அமைத்து அதில் அந்த சிலையை வைத்து வழிபடலாயினர். அன்று மேல்கோட்டையில் ராமானுஜர் தானே உவந்து கொடுத்த சிலை இன்றளவும் அங்கே ”தாமுகந்த திருமேனி” என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகிறது.
அடுத்து ராமானுஜரின் பிறந்த ஊராரின் விருப்பப்படி ஸ்ரீபெரும்புதூரிலே ராமானுஜரின் சீடர்கள் மற்றும் வைணவ அடியார்கள் இவருக்கு தனி சன்னதி ஏற்படுத்த விரும்பினர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப அங்கு சிலை வைக்கும் திட்டதிற்கு உடையவர் சம்மதித்தார், அதன்படி அங்கு வைக்கப்பட்டுள்ள சிலை, தம்மவர் உகந்து வைத்த சிலை என்பதால், “தமர் உகந்த திருமேனி” என்ற பெயரில் அவ்வூரில் ராமானுஜர் சன்னதியில் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
பூவுலகில் 120 ஆண்டுகள் வாழ்ந்திருந்த ராமானுஜர்,சுமார் 900 ஆண்டுகளுக்கு முன், இதே ஸ்ரீரங்கத்திலே திருநாட்டுக்கு எழுந்தருளியபின்னர், அவரது பூதஉடல் ரங்கநாதர்கோயில் வசந்த மண்டபத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பின்னர் யோக சக்தியால் அவரது உடல் வெளியில் வந்ததாகவும் அதை ஆண்டுக்கு இருமுறை பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து மை போலாக்கிப் திருமேனிமீது பூசி பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராமானுஜரின் அசல் சரீரம் என்ற கருத்தில், இங்குள்ள திருமேனி, ”தானான திருமேனி” என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.