மாகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்வது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், ஏன் ஆடி அமாவாசையிலும் செய்யச் சொல்கிறார்கள்? ராமபிரான், ராவணனைக் கொன்று பிறகு அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய ராமேஸ்வரக் கடலில் சிவனை நினைத்து வணங்கி நீராடினார். இது ஒரு ஆடி அமாவாசை நாளில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஆடி மாதம் பித்ருக்களை நினைத்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடினால் நற்பலன் கிட்டும் என்பது ஐதிகம்.
கடல் என்பது நீரால் ஆனது. ஆனாலும் ராமேஸ்வரக் கடலை அக்னி தீர்த்தம் என்கிறார்களே? ஏன் தெரியுமா? அதன் பின்னாலும் ஒரு புராணக்கதை இருக்கிறது. ராவணவதம் முடிந்த பிறகு சீதையை அக்னிப்பரீட்சைக்கு ஆட்படுத்தினார் ராமர். கணவன் சொல்லைத் தட்டியறியாத அம்மாதரசி நெருப்பில் மூழ்கினாள். அவளது கற்பின் ஜுவாலையைத் தாங்க முடியாத அக்னி பகவான், சூடு தாங்காமல் அலறினார். மனமிரங்கிய சீதாபிராட்டியார், பக்கத்தில் இருந்த கடலில் அவரை நீராடச் சொன்னார். கடலில் இறங்கி தனது வெப்பத்தைத் தணித்துக்கொண்டாராம் அக்னி பகவான். அதனால் கடல் தண்ணீர் சற்றே வெம்மையானதாம். அதனால்தான் ராமேஸ்வரக்கடலை அக்னி தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
ஆடி அமாவாசை அன்று அர்ப்பணிக்கும் தண்ணீரும் எள்ளும் நம் முன்னோரின் தாகத்தையும் பசியையும் தணிக்கும் என்பது ஐதிகம். ஆகையால்தான் பக்கத்தில் இருக்கும். ஏதாவது நீர்நிலைக்குச் சென்று நீராடி நீத்தோருக்கு படையலிடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வாறு செய்ய விரும்புவர்கள் கடைசியில் வாங்கிய பொருட்களாக இல்லாமல் வீட்டிலேயே பல வகையான உணவுப்பொருட்களை தயார் செய்து, தலை வாழை இலையில் வயோதிகர்களுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் உணவிட வேண்டும் அப்படிச் செய்வதன் மூலம் முன்னோரது ஆசியையும் அருளையும் பெறலாம்.