விநாயகருக்கு புதன் கிழமையில் அருகம்புல் சாத்தி வழிபடுவது சிறப்பு. தொடர்ந்து 9 புதன்கிழமைகளில் வழிபட்டு ஏழைக்குழந்தைகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் தானம் அளித்தால் ஞாபகசக்தி அதிகரித்து பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவர்.
மும்பை சித்தி விநாயகர் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் விநாயகரை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் கூடுவர். வேலை தேடுபவர்கள் மனதிற்கு பிடித்த நல்ல பணி கிடைக்க வேண்டிக் கொள்வர். இதற்கு நன்றிக்கடனாக முதல் மாத சம்பளம் பெற்றதும் சித்தி விநாயகருக்கு புதிய வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.
மும்பை டிட்வாலா மகாகணபதியின் கண்கள், வயிற்றில் வைரக்கற்கள் ஜொலிக்கும். உயிரோட்டத்துடன் நாகபந்த பீடத்தில் அமர்ந்து தன்னை தரிசிப்போருக்கு உடல்நலமும், மனநலமும் அளிக்கிறார். சதுர்த்தியன்று இவரை வழிபட்டால் நிழல் கிரகங்களான ராகு, கேது தோஷம் நீங்கும்.
புனே மார்க்கெட் பகுதியில் ‘தகடுசேட் கணபதி’ கோயில் உள்ளது. இங்கு விநாயகருக்கு படைத்த பொரி, தீர்த்தத்தை பக்தர்களே எடுத்துக் கொள்ளலாம். இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் லாபத்தில் பத்தில் ஒரு பங்கை இவருக்கு காணிக்கையாக செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு மல்லேஸ்வரம் 8வது கிராஸில் உள்ள விநாயகர் கல்யாண யோகம் அளிப்பவராக இருக்கிறார். இவருக்கு சோமாஸி என்னும் கர்ஜிக்காய் மாலை சாத்தி வழிபட்ட திருமணத்தடை நீங்கும். வளர்பிறை சதுர்த்தியன்று இவரை தரிசிப்போருக்கு குறையில்லா வாழ்வு கிடைக்கும்.
முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை அடிவாரத்தில் கண் கொடுத்த விநாயகர் இருக்கிறார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்யும் முன் இங்கு வழிபடுகின்றனர். இவரை விநாயகர் சதுர்த்தியன்று தரிசித்தால் கண் நோய் வராது. வயதான காலத்திலும் பார்வைக் குறைபாடு ஏற்படாது.
விநாயகருக்கு 16 சிறப்பு பெயர்கள் உள்ளன. இதில் 16வது பெயர் ஸ்கந்த பூர்வஜன். தம்பியான முருகனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ‘கந்தனுக்கு மூத்தவர்’ எனப்படுகிறார். அம்மா, அப்பா, மாமா, அத்தை என பல உறவுகள் இருப்பினும் தம்பி மீதுள்ள அன்பால் இப்படி அழைக்கப்படுகிறார்.
தொந்தி கணபதியை வடமொழியில் ‘டுண்டி கணபதி’ என்பர். காசியிலுள்ள ‘டுண்டி ராஜகணபதி’ பிரசித்தமானவர். இதே பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இலங்கை செல்ல சேதுக்கரையில் பாலம் கட்டும் முன் ராமபிரான் இவரை வழிபட்டார்.
ஒரே சன்னதியில் இரண்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து இரட்டை விநாயகராக வழிபடுவர். இவர்களை விக்னராஜர், விநாயகர் என சொல்வர். ‘தடையும் நானே; அதைப் போக்கும் விடையும் நானே’ என்பது தான் இரட்டை பிள்ளையாரின் தத்துவம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்
நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதி விநாயகர். கேது திசை, கேது புத்தியால் சிரமப்படுபவர்கள் செவ்வாயன்று இவரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமையில் வன்னி இலைகளால் அர்ச்சித்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி பாதிப்பு குறையும். ஞாயிறன்று எருக்கம்பூ மாலை அணிவிக்க சூரிய தோஷம் விலகும்.
சித்துார் அருகே காணிப்பாக்கம் நிஜரூப சுயம்பு விநாயகர் சக்தி மிக்கவராக இருக்கிறார். வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க இவரை வழிபடுகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில மக்கள் விநாயகரை முமுழுதல் கடவுளாக வழிபடுகின்றனர். அஷ்ட விநாயகர் கோயில் என்னும் பெயரில் புகழ் மிக்க 8 விநாயகர் கோயில்கள் உள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்டியவர் பாலகங்காதர திலகர்.
திருஞான சம்பந்தர் நாகபட்டினம் மாவட்டம் திருமருகல் சிவன் கோயிலில் தங்கியிருந்தார். இங்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் இளைஞன் ஒருவன் இறந்ததை அறிந்து, பதிகம் பாடி பிழைக்கச் செய்தார். இக்கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரில் விஷபயம் போக்கும் ‘விடம் தீர்த்த விநாயகர்’ கோயில் உள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் உச்சிஷ்ட கணபதி கோயில் உள்ளது. இவருக்கு முதுகை காட்டி தோப்புக்கரணம் இடுவது மரபாக உள்ளது. முகம், முதுகு என்ற பாகுபாடு கடவுளுக்கு கிடையாது, எல்லாம் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்கின்றனர்.